தேசிய செய்திகள்

‘ராணுவ மறுசீரமைப்பை படிப்படியாக செயல்படுத்த வேண்டும்’ - விமானப்படை தளபதி ஏ.பி.சிங்

விமானப்படையின் போர் விமானங்களை புவியியல் ரீதியாக நிரந்தரமாக பிரிப்பதில் உடன்பாடு இல்லை என ஏ.பி.சிங் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

விமானப்படை தலைமை தளபதி ஏ.பி.சிங் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

“விமானப்படை எப்போதும் முப்படைகளின் கூட்டு முயற்சிக்கும், ஒருங்கிணைப்பிற்கும் முழு ஆதரவு அளிக்கிறது. ஆனால், வெளிநாட்டு ராணுவ மாடல்களை அப்படியே நாம் இங்கு நக லெடுக்கக் கூடாது. இந்தியாவின் பிரத்யேக பாதுகாப்பு தேவைகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு நமது திட்டங்கள் அமைய வேண்டும்.

விமானப்படையின் பலமே அதன் வேகம், நெகிழ்வுத்தன்மை மற்றும் இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன்தான். வான்வழி எரிபொருள் நிரப்புதல் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம், மிகத் தொலைவில் இருந்தும் நம்மால் எதிரிகளை வீழ்த்த முடியும். எனவே, அவசரப்பட்டு போர் விமானங்களை குறிப்பிட்ட மண்டலங்களுக்குள் முடக்கிவிடக் கூடாது.

விமானப்படையின் போர் விமானங்களை புவியியல் ரீதியாக நிரந்தரமாக பிரிப்பதில் உடன்பாடு இல்லை. தேவையான இடங்களில் மத்திய கட்டுப்பாடும், தகுந்த இடங்களில் வளர்ச்சி சார்ந்த செயல்பாடும் இருக்க வேண்டும் என்பதே நமது வழிகாட்டுதல் கொள்கை. 'ஆபரேஷன் சிந்தூர்' போன்ற கூட்டு நடவடிக்கைகளில் இந்த அணுகுமுறை நமக்கு பெரும் வெற்றியை தந்தது.

ராணுவ மறுசீரமைப்பு போன்ற, பெரிய மாற்றங்களை ஒட்டுமொத்தமாக செய்யாமல், படிப்படியாகவே செயல்படுத்த வேண்டும். அப்போதுதான் நாட்டின் பாதுகாப்பு தயார்நிலையில் எந்தவித தொய்வும் ஏற்படாது. எதிர்காலப் போர்கள் பன்முகத்தன்மை கொண்டதாக இருக்கும். அதற்கு முப்படைகளும் இணைந்து செயல்படுவது அவசியம்.”

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT