தேசிய செய்திகள்

ஞானேஷ் குமாரை கைது செய்து தேசத் துரோக வழக்கின் கீழ் விசாரிக்க வேண்டும் - அரவிந்த் கெஜ்ரிவால்

தேர்தல் ஆணையத்தை சர்வாதிகாரி போல் ஞானேஷ் குமார் நடத்துவதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டி உள்ளார்.

புதுடெல்லி,

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை உடனடியாகக் கைது செய்து, தேசத் துரோக வழக்கின்கீழ் விசாரிக்கப்பட வேண்டும் என்று டெல்லி முன்னாள் முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தி உள்ளார்.

எஸ்.ஐ.ஆர். பணிகள்

நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் எஸ்.ஐ.ஆர். பணிகள் தொடர்பாக தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் கடந்த 10 மாதங்களில் குறைந்தது 14 முறை சில முடிவுகள் மற்றும் உத்தரவுகளுக்கு ஆட்சேபனை தெரிவித்ததாக தனியார் நாளிதழ் ஒன்றில் செய்திகள் வெளியாகியிருந்தன. வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்குவது, வாக்காளர் தரவுத்தளத்தை கையாள்வது உள்ளிட்ட விவகாரங்களில் அவர்கள் கேள்வி எழுப்பியதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்திலும் புயலை கிளப்பி உள்ளது.

சர்வாதிகாரி போல்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக செயல்பட்டதாக செய்திகள் வெளியானநிலையில், இதற்கு ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் டெல்லி முன்னாள் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது:-

பிரதமர் மோடியும் அமித் ஷாவும் வாக்குகளை திருடி தேர்தலில் வெற்றி பெறுகிறார்கள் என்று இதுவரை கேள்விப்பட்டோம். இன்று வந்துள்ள செய்திகள் அதனை நிரூபித்துள்ளன. இதற்கு மூளையாக செயல்படுபவர் ஞானேஷ் குமார்தான்.

தேர்தல் ஆணையத்தை சர்வாதிகாரி போல் ஞானேஷ் குமார் நடத்துகிறார். தனது சக தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோரை புறக்கணித்துவிட்டு, தன்னிச்சையாக அதிகாரிகளுக்கு உத்தரவுகளை பிறப்பிக்கிறார்.

மறு வாக்குப்பதிவு

தலைமை தேர்தல் ஆணையர் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும். டெல்லி, பீகார், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தல்களை ரத்து செய்து மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும்

தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமலே உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவதாக கூறி, மற்ற இரண்டு தேர்தல் ஆணையர்களும் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு தொடர்ந்து கடிதங்களை எழுதியுள்ளனர்.

தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் பிறப்பிக்கப்படும் அனைத்து உத்தரவுகளும் சட்டவிரோதமானவை. ஒட்டுமொத்த SIR செயல்முறையும் சட்டவிரோதமானது. எனவே, அந்த SIR செயல்முறை முழுவதையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.

மூன்றாண்டுகளுக்கு முந்தைய

குறிப்பிட்ட பகுதிக்கான தேர்தல் பதிவு அதிகாரிக்கு (ERO) மட்டுமே வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்கவோ அல்லது நீக்கவோ அதிகாரம் உள்ளது. தேர்தல் பதிவு அதிகாரியின் இணையதள அணுகல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் அவரது அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளதாகவும் இரு தேர்தல் ஆணையர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.

டெல்லியில் அமர்ந்திருக்கும் சிலருக்கு நாடு முழுவதுக்குமான வாக்காளர் பட்டியலை அணுகும் வசதி உள்ளது. அவர்கள் விரும்பும் நபர்களின் பெயர்களைப் பட்டியலில் சேர்க்கவோ அல்லது நீக்கவோ அவர்களால் முடியும்.

கடந்த மூன்றாண்டுகளில் வாக்காளர் பட்டியலில் செய்யப்பட்ட அனைத்து மாற்றங்களையும் ரத்து செய்துவிட்டு, மூன்றாண்டுகளுக்கு முந்தைய வாக்காளர் பட்டியலை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கையாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT