மஹுவா மொய்த்ரா 
தேசிய செய்திகள்

வெறுப்பு பேச்சு: திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மகுவா மொய்த்ராவுக்கு பிடிவாரண்ட்

மகுவா மொய்த்ராவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட கைது வாரண்டை நிறைவேற்றியது தொடர்பான அறிக்கையை வருகிற 28-ந் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது

மேற்கு வங்காள மாநிலம் நாடியா மாவட்டத்தில், வெறுப்பு பேச்சு தொடர்பான வழக்கில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி மகுவா மொய்த்ராவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவு பிறப்பித்தும், தொடர்ந்து அவர் பலமுறை ஆஜராகாததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பலமுறை சம்மன்

மகுவா மொய்த்ரா மீது பெண்களை அவமதிக்கும் வகையிலும், வெறுப்பைத் தூண்டும் வகையிலும் கருத்துகள் தெரிவித்ததாக புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் அவரை நேரில் ஆஜராகுமாறு நீதிமன்றம் பலமுறை சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், அந்த சம்மன்களைத் தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. கடந்த 18-ந் தேதி கூட மறுநாள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து நாடியா மாவட்டம் கிருஷ்ணநகர் நீதிமன்றத்தின் 3-வது நீதித்துறை நடுவர் மகுவா மொய்த்ராவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்க உத்தரவிட்டார்.

வக்கீல் கூறிய காரணம்

மகுவா மொய்த்ரா சார்பில் ஆஜரான வக்கீல், அவர் நீதிமன்றத்துக்கு வந்தால் வெளியே சிலர் அவரை கேலி செய்து இடையூறு செய்யக்கூடும் என்ற அச்சம் இருப்பதாக தெரிவித்தார்.ஆனால், தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுகளை அவர் பின்பற்றாதது குறித்து நீதிபதி அதிருப்தி தெரிவித்தார். நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காத தொடர்ச்சியான நடவடிக்கைகளால், கைது வாரண்ட் பிறப்பிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று நீதிமன்றம் தெரிவித்தது.

ஆகஸ்ட் 28-ல் அறிக்கை

மகுவா மொய்த்ராவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட கைது வாரண்டை நிறைவேற்றியது தொடர்பான அறிக்கையை வருகிற 28-ந் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.இதனால், வெறுப்பு பேச்சு வழக்கில் மகுவா மொய்த்ராவுக்கு எதிரான சட்ட நடவடிக்கை மேலும் தீவிரமடைந்துள்ளது.