புதுடெல்லி
அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் நாட்டை கடந்த பிப்ரவரி இறுதியில் தாக்கியது. இந்த தாக்குதல் தொடர்ந்த நிலையில், ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. கண்ணிவெடிகளையும் புதைத்து வைத்தது. இந்த பகுதியில் நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட சரக்கு கப்பல்கள் கடந்து செல்ல கூடிய நிலையில், ஈரான் நடவடிக்கையால் கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்த மேற்காசிய போரால் உலகளாவிய அளவில் எரிபொருள் விலை ஏற்றம் கண்டு வருகிறது. இதனை முன்னிட்டு, பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டை குறைத்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி கடந்த 10-ந்தேதி பேசும்போது, நாட்டு மக்களிடம் வேண்டுகோளாக கேட்டு கொண்டார்.
இந்திய பொருளாதாரம் வலுப்படுவதற்காகவும், அந்திய செலாவணி இருப்பை பாதுகாக்கும் நோக்கிலும் இத்திட்டங்களை அவர் கூறினார். வீட்டில் இருந்து பணிபுரிதலை ஊக்குவிக்கவும், ஓராண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம் என்றும், எரிபொருள் நுகர்வை குறையுங்கள் என்பன உள்பட பல்வேறு விசயங்களை பற்றி அவர் பேசினார்.
இதற்கு எடுத்துக்காட்டாக தன்னுடைய பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையை பாதியாக குறைக்க சிறப்பு பாதுகாப்பு படைக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். வாகனங்கள் குறைக்கப்பட்டாலும், கட்டாய பாதுகாப்பு விதிமுறைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
இதேபோன்று, தமது பாதுகாப்பு வாகனங்களில் மின்சார கார்களை கூடுதலாக பயன்படுத்தவும் யோசனை வழங்கியுள்ளார். இந்த மாற்றத்திற்காக புதிய வாகனங்களை வாங்க கூடாது என்றும், இருப்பில் உள்ள வாகனங்களையே பயன்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு ஏற்ப, மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் தன்னுடைய பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையை பாதிக்கும் கீழாக குறைத்திருக்கிறார்.