புதுடெல்லி
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் வெற்றி பெற்ற இந்திய பெண்கள் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.
துபாயில் நடந்த 10-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியனான இலங்கை அணியை வீழ்த்தி, வெற்றி பெற்ற இந்திய பெண்கள் அணிக்கு பிரதமர் மோடி தன்னுடைய வாழ்த்துகளை இன்று தெரிவித்து கொண்டார். இதுபற்றி அவர் வெளியிட்ட செய்தியில், இந்திய கிரிக்கெட்டுக்கு பெருமையான ஒரு தருணம். ஆசிய கோப்பையை வென்ற பெண்கள் அணிக்கு வாழ்த்துகள்.
அவர்களின் தன்னம்பிக்கை, நீடித்தத்தன்மை மற்றும் குறிப்பிடத்தக்க உற்சாகம் ஆகியவை போட்டி தொடர் முழுவதும் முழுமையாக வெளிப்பட்டது.
அவர்களுடைய இந்த வெற்றி நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான இளைஞர்களை மேலும் விளையாட செய்யவும், விளையாட்டில் அவர்கள் பிரகாசிக்கவும் ஊக்குவிக்கட்டும் என பதிவிட்டு உள்ளார்.
பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இந்தியாவும், நடப்பு சாம்பியன் இலங்கையும் நேற்றிரவு விளையாடின. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து விளையாடிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 183 ரன்கள் குவித்தது. ஸ்மிருதி மந்தனா அரைசதம் விளாசினார்.
தொடர்ந்து, 184 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் ஆடிய இலங்கை அணியில் கேப்டன் சமாரி அட்டப்பட்டு (36 ரன்), விஷ்மி குணரத்னே (20 ரன்) அடித்தனர். எனினும், அந்த அணி 20 ஓவர்களில் 111 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. இதன் மூலம் இந்தியா 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையையும் தட்டிச்சென்றது. இந்திய அணி 8-வது முறையாக ஆசிய கோப்பையை கைப்பற்றி உள்ளது.