புதுடெல்லி
அசாமில் முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. மே 20-ந்தேதியுடன் அசாம் மாநில பதவி காலம் முடிவடையும். இந்நிலையில், 126 தொகுதிகளை கொண்ட அசாம் மாநிலத்திற்கு, ஏப்ரல் 9-ந்தேதி ஒரே கட்டத்தில் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, கட்சிகள் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, ஏப்ரல் 1,3 மற்றும் 6 ஆகிய நாட்களில் அசாமில் தேர்தல் கூட்டங்களில் கலந்து கொண்டு மக்களிடம் உரையாற்றுவது என பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.
அசாமில் 3-வது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும் முனைப்பில் பா.ஜ.க. தேர்தல் பணியாற்றி வருகிறது. எனினும், பா.ஜ.க.வை வீழ்த்தி இந்த தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ் கட்சியும் திட்டம் தீட்டி வருகிறது.
இந்நிலையில், அசாமின் நகாவன் தொகுதியில் 2 முறை காங்கிரஸ் எம்.பி.யாக பதவி வகித்த பிரத்யுத் போர்டோலாய் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்து விட்டு, அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா மற்றும் மாநில பா.ஜ.க. தலைவர் திலீப் சாய்கியா ஆகியோர் முன்னிலையில் பா.ஜ.க.வில் இன்று இணைந்துள்ளார். இது காங்கிரசில் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.