தேசிய செய்திகள்

நடுரோட்டில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட தொழிலதிபரின் மனைவி - வைரல் வீடியோ

அசாம் மாநிலம் கவுகாத்தியை சேர்ந்த பிரபல தொழிலதிபர் கவுதம் பவுரா.

கவுகாத்தி,

அசாமில் நடுரோட்டில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட தொழிலதிபரின் மனைவி வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

அசாம் மாநிலம் கவுகாத்தியை சேர்ந்த பிரபல தொழிலதிபர் கவுதம் பவுரா. இவருக்கு திருமணமாகி ஹரபி என்ற மனைவி உள்ளார்.

பிறந்தநாள் கொண்டாட்டம்

இதனிடையே, கவுதம் பவுராவின் மனைவி ஹரபி நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். மனைவியின் பிறந்தநாளையொட்டி கவுதம் பவுரா தனது மனைவி ஹரபி மற்றும் ஆதரவாளர்களுடன் கவுகாத்தி மற்றும் வடக்கு கவுகாத்தியை இணைக்கும் வகையில் பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்திற்கு சென்றனர்.

அங்கு பாலத்தின் ஒரு பகுதியை மறித்து நடுரோட்டில் சிவப்புகம்பளம் விரித்து பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ரோட்டில் சிவப்புகம்பளம் விரித்து , பலூன்கள், அலங்காரங்கள் செய்து வைக்கப்பட்ட பகுதிக்கு கணவன் பவுராவுடன் சென்ற ஹரபி தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார். இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.

வழக்குப்பதிவு

இதையடுத்து, தொழிலதிபர் பவுரா, நடுரோட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ஹரபி அவரது ஆதரவாளர்கள் என மொத்தம் 14 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.