பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தொட்ட தோகூரில் துரித உணவுகள் விற்கும் ஓட்டல் நடத்தி வருபவர் தீபக் தாபா. இவரது சொந்த ஊர் அசாம் ஆகும். தொட்ட தோகூர் அருகே தனது மனைவியுடன் தீபக் வசித்து வருகிறார். இவரது ஓட்டலுக்கு 4 பேர் இரவில் உணவு சாப்பிட வந்தனர். பின்னர் 4 பேரும் தங்களுக்கு நூடுல்ஸ் வேண்டும் என கேட்டனர். அதன்படி, தீபக்கும் நூடுல்ஸ் தயார் செய்து கொடுத்தார்.
அதனை சாப்பிட்ட 4 பேரும். நூடுல்சில் அதிக காரம் இருப்பதாகவும், தங்களால் சாப்பிட முடிய வில்லை எனவும் தீபக்கிடம் கூறினார்கள். மேலும் அவருடன் வாக்குவாதம் செய்ததுடன், தீபக்கை அடித்து, உதைத்து தாக்கினார்கள். அத்துடன் அவரது வாயில் நூடுல்சை திணிக்க முயன்றனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தீபக்கின் மனைவி மற்றும் ஒரு வாலிபர் ஓடிவந்து தீபக்கை காப்பாற்ற முயன்றனர்.
அவர்களையும் 4 பேர் தாக்கினார்கள். இதில், தம்பதி உள்பட 3 பேருக்கும் பலத்தகாயம் ஏற்பட்டது. குடிபோதையில் 4 பேரும் தம்பதியை தாக்கியது தெரியவந்தது. இதுகுறித்து எலெக்ட்ரானிக் சிட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகாலை சேர்ந்த நாகராஜ், சந்துரு, தேவராஜ் உள்பட 4 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.