திஸ்பூர்,
அசாமில் கடந்த 1975-ம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்தவர் பிரதியுத் பர்டோலாய். 4 முறை எம்.எல்.ஏ.வாகவும், 2 முறை எம்.பி.யாகவும் இருந்த இவர், மாநில மந்திரியாகவும் பதவி வகித்து உள்ளார். தற்போது எம்.பி.யாக இருந்த பிரதியுத் நேற்று முன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்து, கட்சித்தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கடிதம் அனுப்பினார்.
உடனே மாநில காங்கிரஸ் தலைவர் கவுரவ் கோகாய் மற்றும் மூத்த தலைவர்கள் அவரது வீட்டுக்கு சென்று அவரை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் அது பலனளிக்கவில்லை. இதைத்தொடர்ந்து நேற்று டெல்லியில் அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா மற்றும் மாநில பா.ஜ.க. தலைவர் திலிப் சைகியா முன்னிலையில் பா.ஜ.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார்.
கடந்த 2 ஆண்டுகளாக காங்கிரசில் தான் அவமானப்படுத்தப்பட்டு வந்ததாக குற்றம் சாட்டிய அவர், அதனால்தான் கட்சியில் இருந்து விலகியதாக தெரிவித்தார். அவரை பா.ஜ.க.தாவுக்கு வரவேற்ற முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா, மாநிலத்தில் அடுத்த மாதம் 9-ந்தேதி நடைபெறும் சட்டசபை தேர்தலில், அவருக்கு சீட் வழங்க பரிந்துரைக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
சுயமரியாதை உள்ள எவரும் காங்கிரசில் இருக்க முடியாது எனக்கூறிய சர்மா, சுயமரியாதை கொண்ட அனைவரும் விரைவில் காங்கிரசில் இருந்து வெளியேறுவார்கள் எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில் பிரதியுத் பர்டோலாய்க்கு தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்பட்டுள்ளது. காங்கிரசில் இருந்து பா.ஜ.க.விற்கு மாறிய அவருக்கு ஒரே நாளில் தேர்தலில் சீட் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன்படி பா.ஜ.க.வின் 88 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலில் பிரத்யுத் போர்டோலோய் திஸ்பூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தந்தை பா.ஜ.க.வில் சேர்ந்ததால் பிரதியுத் பர்டோலாயின் மகன் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பின் விலகி உள்ளார்.
பா.ஜனதாவுக்கு தாவிய பிரதியுத் பர்டோலாய், வருகிற சட்டசபை தேர்தலில் காங்கிரசின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு தலைவராக இருந்தது குறிப்பிடத்தக்கது. அவரது கட்சித்தாவல் காங்கிரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.