கவுகாத்தி,
அசாமில் ரூ. 43 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
மியான்மரில் இருந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் அசாம் எல்லையில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அசாமில் உள்ள சோதனைச்சாவடியில் ஒரு லாரியை மறித்து அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, அந்த லாரியில் மியான்மரில் இருந்து சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட 54 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து போதைப்பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதை கடத்தி வந்த மணிப்பூரை சேர்ந்த 2 பேரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு ரூ. 43 கோடி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட போதைப்பொருள் கடத்தல் கும்பல் குறித்தும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.