அபினாஷ் மண்டல் 
தேசிய செய்திகள்

பட்டியலின மாணவர்களுக்கான தேசிய கல்வி உதவித்தொகை மூலம் தனது கனவை நனவாக்கிய அசாம் மாநில இளைஞர்

அபினாஷ் மண்டல், தற்போது புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் வணிகவியல் துறை விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார்.

கவுகாத்தி,

மத்திய அரசின் தேசிய கல்வி உதவித்தொகை திட்டத்தை பயன்படுத்தி, வறுமையை வென்று புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் வணிகவியல் துறை விரிவுரையாளராக உயர்ந்துள்ளார் அசாம் மாநிலத்தை சேர்ந்த பட்டியலின இளைஞர் அபினாஷ் மண்டல்.

பேராசிரியர் கனவு

அசாம் மாநிலம், உதல்குரி கிராமத்தை சேர்ந்தவர் அபினாஷ் மண்டல். பொருளாதாரத்தில் மிகவும் நலிவடைந்த குடும்ப பின்னணியை கொண்ட இவர், சிறு வயது முதலே வணிகவியல் துறையில் சாதிக்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் ஒரு சிறந்த பேராசிரியராக வர வேண்டும் என்றும் கனவு கண்டார். ஆனால், குடும்பத்தின் சமூக, பொருளாதார சூழல் அவரது உயர்கல்வி கனவுக்கு பெரும் முட்டுக்கட்டையாக இருந்தது. வறுமையின் காரணமாக தனது லட்சியத்தை எட்ட முடியாமல் தவித்த அவருக்கு, மத்திய அரசின் உதவித்தொகை பயனுள்ளதாக அமைந்தது.

திருப்புமுனை

பட்டியலின மாணவர்களுக்கான தேசிய கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், கடந்த 2020 முதல் 2024-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் அபினாஷுக்கு கல்வி உதவித்தொகை கிடைத்தது. இது அவரது வாழ்க்கையையே தலைகீழாக மாற்றியது. ஆரம்பத்தில் இளநிலை ஆராய்ச்சியாளர் பிரிவின் கீழ் அவருக்கு மாதம் 37 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து, அவரது சிறப்பான செயல்பாட்டால் முதுநிலை ஆராய்ச்சியாளராக உயர்ந்த போது, இந்த உதவித்தொகை மாதம் 42 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டது.

சர்வதேச அளவில் அங்கீகாரம்

பொருளாதார நெருக்கடிகள் நீங்கியதால், முழு கவனத்தையும் ஆராய்ச்சி படிப்பில் செலுத்திய அபினாஷ் மண்டல், வெற்றிகரமாக முனைவர் பட்டம் பெற்றார். மேலும், இந்தியாவின் மிக உயரிய கல்வி நிறுவனங்களான ஐஐஎம் புத்த கயா, ஐஐஎம் இந்தூர் மற்றும் ஐஐடி டெல்லி ஆகியவற்றில் தனது ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்து சர்வதேச அளவில் பாராட்டுக்களை பெற்றார்.

வறுமையை வென்று சாதனை

தனது கடின உழைப்பாலும், அரசின் நிதியுதவியாலும் பொருளாதார தடைகளை தகர்த்தெறிந்த அபினாஷ் மண்டல், தற்போது புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் வணிகவியல் துறை விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். கிராமப்புறத்தில் பிறந்து, வறுமையை வென்று சாதனை படைத்துள்ள இந்த அசாம் இளைஞர், பொருளாதாரத்தில் பின்தங்கிய பல நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு பெரும் முன்னுதாரணமாக திகழ்கிறார்.

SCROLL FOR NEXT