தேசிய செய்திகள்

ஈரானியத் தலைவர் அயதுல்லா காமேனி படுகொலை - ஸ்ரீநகரில் போராட்டம்

அமெரிக்கா தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார்.

ஸ்ரீநகர்,

ஈரான் அணு ஆயுத தயாரிப்பை நிறுத்த வேண்டும்; அதற்கான யுரேனியம் செறிவூட்டலையும் முழுமையாக நிறுத்த வேண்டும். நீண்ட தொலைவு சென்று தாக்கும் ஏவுகணைத் திட்டங்களை ரத்து செய்ய வேண்டும். மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் தனது கிளர்ச்சி படைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்திய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிடவும் ஈரானை வலியுறுத்தினார்.

இதுதொடர்பாக அமெரிக்கா – ஈரான் இடையே நடைபெற்ற இரு சுற்றுப் பேச்சுவார்த்தைகளிலும் சுமுக உடன்பாடு ஏற்படவில்லை. அதைத் தொடர்ந்து, ஈரான் உடனடியாக ஒப்பந்தம் மேற்கொள்ளாவிட்டால் மோசமான பேரழிவைச் சந்திக்க நேரிடும் என்று டிரம்ப் மிரட்டல் விடுத்தார். ஈரானைச் சுற்றி அமெரிக்க போர்க்கப்பல்கள் விரைந்தன.இதனால் ஈரான் மீது அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்ற பதற்றம் நிலவிய நிலையில், நேற்று இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து தாக்குதலை நடத்தின. ஈரானில் தலைநகர் தெஹ்ரான் உள்பட பல இடங்களில் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதாக ஈரானிய ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. காமேனி கொல்லப்பட்டதால் ஈரானில் போராட்டம் வெடித்துள்ளது. ஈரான் மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் போராட்டம் நடைபெற்றது. காமேனி உருவப்படத்தை ஏந்தியபடி அமெரிக்காவை கண்டித்து மக்கள் போராட்டம் நடத்தினர். உத்தர பிரதேச மாநிலம் லக்னோவிலும் போராட்டம் நடைபெற்றது.