தேசிய செய்திகள்

புதுச்சேரி, கேரளம், அசாமில் சட்டசபை தேர்தல்: வேட்பு மனுதாக்கலுக்கு இன்று கடைசி நாள்

வேட்பு மனு மீதான பரிசீலனை நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

புதுடெல்லி,

அசாம், கேரளம் ஆகிய மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் ஏப்ரல் 9-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 16-ந்தேதி தொடங்கியது. 30 தொகுதிகள் கொண்ட புதுச்சேரியில் கடந்த 18-ந்தேதி 12 பேரும், 19-ந்தேதி 5 பேரும் மனுதாக்கல் செய்தனர். 20-ந்தேதியன்று ஒரே நாளில் 114 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதில் முதல்-அமைச்சர் ரங்கசாமி மங்கலம், தட்டாஞ்சாவடி என 2 தொகுதிகளில் போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்தார். இதுதவிர பா.ஜனதா காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்களும் மனுதாக்கல் செய்தனர். இதுவரை 135 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

வேட்பு மனுதாக்கல் செய்ய இன்று (திங்கட்கிழமை) கடைசி நாள் ஆகும். காங்கிரஸ்-தி.மு.க. இடையே இன்னும் தொகுதி பங்கீடு முடியாத நிலையில் இன்றுக்குள் ஏதாவது முடிவு தெரிந்துவிடும். எனவே அந்த கட்சிகள் சார்பில் போட்டியிடுபவர்கள் இன்று மனு தாக்கல் செய்வார்கள். இதேபோல் பா.ஜனதா, என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க.வை சேர்ந்தவர்களும் கடைசி நாளான இன்று மனுதாக்கல் செய்கின்றனர். இதனால் தேர்தல் அலுவலகங்கள் இன்று களைகட்டும்.

அசாம்

இதேபோல் 126 உறுப்பினர்களை கொண்ட அசாம் மாநில சட்டசபைக் கும் ஏப்ரல் 9-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இங்கு பா.ஜனதா கூட்டணிக் கும், காங்கிரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

அம்மாநில பா.ஜனதா முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா, ஜலுக்பாரி தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் கடந்த 20-ந்தேதி வேட்பு மனு தாக்கல் செய்தார். இன்றுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடையும் நிலையில் 6 கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்கும் காங்கிரஸ், தனது வேட்பாளர் பட்டியலை நேற்று இறுதி செய்தது.

கேரளம்

இதேபோல் கேரளம் மாநிலத்தில் உள்ள 140 சட்டசபை தொகுதிகளுக்கும் வருகிற ஏப்ரல் 9-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுதாக்கல் இன்றுடன் முடிவடைகிறது.

இந்த தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமையில் ஒரு அணி, காங்கிரஸ் தலைமையில் ஒரு அணி, பா.ஜனதா சார்பில் மற்றொரு அணி என மும்முனை போட்டி நிலவுகிறது.

தேர்தலில் போட்டியிட நேற்று வரை 362 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இன்று கடைசிநாள் என்பதால் இதுவரை வேட்பு மனு தாக்கல் செய்யாத வேட்பாளர்கள், சுயேச்சைகள் வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என்பதால் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

வேட்பு மனு மீதான பரிசீலனை நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. மனுக்களை வாபஸ் பெற வருகிற 26-ந்தேதி (வியாழக்கிழமை) கடைசி நாள் ஆகும்.