தேசிய செய்திகள்

வறுமை ஒழிப்பு திட்ட அதிகாரியிடம் ரூ.4.75 கோடி சொத்துகள்; ரெய்டில் அதிர்ச்சி

இந்த சொத்துகளின் சந்தை மதிப்பு ரூ.100 கோடி வரை இருக்கலாம் என்று பலரும் கூறுகின்றனர்.

ஐதராபாத்

தெலுங்கானாவில் வறுமை ஒழிப்பு திட்ட அதிகாரியிடம் நடந்த ரெய்டில் ரூ.4.75 கோடி மதிப்பிலான சொத்துகள் அடையாளம் காணப்பட்டன.

தெலுங்கானாவில் நகராட்சி பகுதிகளுக்கான வறுமை ஒழிப்பு திட்டத்தின் கூடுதல் இயக்குநராக இருப்பவர் யாதகிரி ராவ் நல்லகுண்ட்லா. இவருடைய வீடு, அலுவலகம், வங்கி லாக்கர்கள், சொந்தக்காரர்கள், கூட்டாளிகள் மற்றும் பயனாளிளின் வீடு உள்ளிட்ட இடங்களில் தெலுங்கானாவின் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

12 பிளாட்டுகள்

இதில், ஐதராபாத் மற்றும் சூர்யாபேட்டையில் ரூ.58.63 லட்சம் மதிப்பிலான 12 பிளாட்டுகள், உப்பலில் ரூ.31.36 லட்சம் மதிப்பிலான 2 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ரூ.2 கோடி மதிப்பிலான ஒரு குடியிருப்பு கட்டிடம் ஆகியவற்றுக்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுதவிர, சூர்யாபேட்டையில் ரூ.4.75 லட்சம் மதிப்பிலான வீடும், உப்பலில் ரூ.1.06 லட்சம் மதிப்பிலான வணிக கடை ஒன்றும் அடங்கும். மேலும், ரூ.33.82 லட்சம் மதிப்பிலான 1,792.2 கிராம் எடையுள்ள தங்க நகைகளும், ரூ.1.8 லட்சம் மதிப்பிலான மூன்று கிலோ வெள்ளி நகைகளும் கைப்பற்றப்பட்டன.

ரூ.100 கோடி

ரூ.73 லட்சம் மதிப்பிலான 2 நான்கு சக்கர வாகனங்கள் (ஒரு டொயோட்டா பார்ச்சூனர் மற்றும் மற்றொரு கார்) மற்றும் ரூ.2.8 லட்சம் மதிப்பிலான மூன்று இருசக்கர வாகனங்களும் கண்டறியப்பட்டன. இது தவிர, வீட்டு உபயோக பொருட்கள் ரூ.29.08 லட்சத்திற்கும், மின்னணு சாதனங்கள் ரூ.7.01 லட்சத்திற்கும், வங்கிக் கணக்குகளில் இருந்த இருப்புத்தொகை ரூ.32.3 லட்சத்திற்கும் மதிப்பிடப்பட்டன.

இந்த சொத்துகளின் மொத்த மதிப்பை ரூ.4,75,61,171 என ஊழல் தடுப்பு பிரிவு கணக்கிட்டுள்ளது. இந்த சொத்துகளின் சந்தை மதிப்பு ரூ.100 கோடி வரை இருக்கலாம் என்று பலரும் கூறுகின்றனர். இதனை தொடர்ந்து, அதிகாரி யாதகிரிக்கு எதிராக முறைகேடான சொத்து குவிப்பு வழக்கு ஒன்றை அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிட்டு உள்ளனர்.

SCROLL FOR NEXT