தேசிய செய்திகள்

ஏடிஎம்மில் எடுக்கப்பட்ட 500 ரூபாய் நோட்டுக்களில் காந்தியின் புகைப்படம் இல்லாததால் பொதுமக்கள் அதிர்ச்சி!

ஏடிஎம்மில் எடுக்கப்பட்ட 500 ரூபாய் நோட்டுகளில் காந்தியின் புகைப்படங்கள் இடம்பெறதாது பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்தது.

லக்னோ,

மத்திய அரசு கடந்த வருடம் நவம்பர் மாதம் கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக 500, 1000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற்றது. இதனையடுத்து புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை வெளியிட்டது. புதியதாக ரூபாய் நோட்டுக்கள் வெளியான போது அவற்றில் வேறுபாடுகள் உள்பட பல்வேறு குளறுபடிகள் செய்தியாகியது. இப்போது ஒரு வருடம் கடந்த பின்னரும் அதுபோன்ற செய்தி வெளியாகி உள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் வங்கி ஏடிஎம்மில் எடுக்கப்பட்ட 500 ரூபாய் நோட்டுக்களில் காந்தியின் புகைப்படங்கள் இடம்பெறவில்லை.

கிரேட்டர் நொய்டா பகுதியில் எச்டிஎப்சி வங்கியில் எடுக்கப்பட்ட 500 ரூபாய் நோட்டுக்கள் சேதம் அடைந்த நிலையிலும், மகாத்மா காந்தியின் புகைப்படம் இடம்பெறாமலும் காணப்பட்டது. ஏடிஎம் இயந்திரத்தில் தொடர்ச்சியாக பணம் எடுத்தவர்களுக்கு காந்தியின் புகைப்படம் இடம்பெறாமல் 500 ரூபாய் நோட்டுக்கள் வந்தது பெரும் அதிர்ச்சியை மக்களிடையே ஏற்படுத்தியது. இதுதொடர்பாக வங்கி நிர்வாகத்திடம் ஏடிஎம் பயன்படுத்தியவர்கள் புகார் தெரிவித்து உள்ளனர். இவ்விவகாரம் தொடர்பாக வங்கி அதிகாரிகளிடம் நாங்கள் புகாரை தெரிவித்து உள்ளோம், அவர்கள் இவ்விவகாரம் தொடர்பாக விசாரிப்பதாக உறுதியளித்து உள்ளனர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் தாங்கூரில் இம்மாதம் ரூ. 11000 கள்ள நோட்டுக்கள் வங்கி ஏடிஎம்மில் டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.