ராஞ்சி,
மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் முகமது ஷஹாபுதீன். இவரது மனைவி முத்ராவதி கோப். இருவரும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில், ஷஹாபுதீன், முத்ராவதி இருவரும் தங்களது குழந்தைகளுடன் ஹவுரா-பார்பில் ஜன் ஷதாப்தி அதிவேக ரெயிலில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது ஷஹாபுதீன், தனது மனைவியிடம் சொந்த ஊருக்கு செல்வோம் என்று கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ரெயிலில் வைத்து இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த முத்ராவதி, பெற்ற குழந்தை என்றும் பாராமல் தனது 6 மாத ஆண் குழந்தையை ஓடும் ரெயிலில் இருந்து வெளியே தூக்கி வீசினார். இதைப்பார்த்து ஷஹாபுதீனும், மற்ற பயணிகளும் அதிர்ச்சியடைந்தனர். அத்துடன் நிற்காமல் தனது 3 வயதுடைய மற்றொரு குழந்தையையும் ஓடும் ரெயிலில் இருந்து வெளியே வீச முற்பட்டுள்ளார்.
அப்போது சுதாரித்துக்கொண்ட பயணிகள், முத்ராவதியிடம் இருந்து குழந்தையை மீட்டனர். உடனடியாக இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், பெற்ற குழந்தை என்றும் பாராமல் ரெயிலில் இருந்து தூக்கி வீசி கொலை செய்த கல்நெஞ்சம் கொண்ட தாயை கைது செய்தனர். குழந்தையின் சடலத்தை தண்டவாளத்தில் இருந்து கைப்பற்றிய போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.