மும்பை,
பாலிவுட் திரையுலகின் பிரபல இளம் நடிகரான டைகர் ஷெராப் கார் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையை சேர்ந்த பிரபல இந்தி நடிகர் டைகர் ஷெராப். 36 வயதான இவர், கார் மேற்கு பகுதியில் வசித்து வருகிறார். 'பாகி', 'பாகி-2'. 'வார்' உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்தநிலையில் நேற்று மாலை டைகர் ஷெராப் ஜூகு புஷ்பா பார்க் பகுதியில் உள்ள கால்பந்து மைதானத்துக்கு சென்றார். இதுபற்றி அறிந்து அவரது ரசிகர்கள் மைதானம் அருகில் குவிந்தனர். இந்தநிலையில் விளையாடி முடித்துவிட்டு டைகர் ஷெராப் காரில் வெளியே வந்தார். அப்போது ரசிகர்கள் திரண்டு இருந்த பகுதியில் அவரது கார் மெதுவாக ஊர்ந்து சென்றது.
அந்த நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 3 பேர் கண்ணிமைக்கும் நேரத்தில் டைகர் ஷெராப்பின் காரை நோக்கி 5 முறை துப்பாக்கியால் சுட்டனர். இதைத்தொடர்ந்து அந்த கும்பல் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பியோடியது.
நடிகர் கார் மீது நடந்த திடீர் துப்பாக்கி சூடு சம்பவத்தால் அங்கு இருந்த ரசிகர்கள் அதிர்ச் சியில் உறைந்தனர். கும்பல் துப்பாக்கியால் சுட்டதில் நடிகர் டைகர் ஷெராப் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். எனினும் அவரது கார் டிரைவர் பிர்தோஷ் மற்றும் அருகில் நின்ற சவுகான் என்பவர் குண்டு பாய்ந்து படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். காயமடைந்த 2 பேரும் அபாயக்கட்டத்தை தாண்டிவிட்டதாக கூறப்படுகிறது.
டைகர் ஷெராப் கார் மீது துப்பாக்கியால் சுட்ட மர்மநபர்களை பிடிக்க 15 தனிப்படைகளை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். இந்த நிலையில், இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தில் சிறுவன் உட்பட 3 பேரை ராஜஸ்தானில் வைத்து போலீசார் கைதுசெய்தனர். ராஜஸ்தான் போலீசுக்கு மும்பை போலீஸ் தகவல் அளித்ததை அடுத்து கோட்டா நகரில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் இருவர் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள், ஒருவர் பீகாரைச் சேர்ந்தவர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டைகர் ஷெராப் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிரபல தாதா லாரன்ஸ் பிஷ் னோய் கும்பல் பொறுப்பேற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.