பெங்களூரு,
பெங்களூரு இந்திராநகர் பகுதியில், பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பொது இடத்தில் பெண் ஒருவரின் கழுத்தில் கத்தியை வைத்து தாலி செயினை பறிக்க முயன்ற துணிகர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தப்பியோட முயன்ற கொள்ளையனை பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.
பெங்களூரு டோம்லூர் 100 அடி சாலையில் காலணி மற்றும் பைகளை பழுதுபார்க்கும் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் ஜெயஸ்ரீ என்ற பெண் ஊழியர் பணியில் இருந்தார். அப்போது அங்கு ஹெல்மெட் அணிந்தபடி பிரபுராஜ் என்ற மர்ம நபர் திடீரென உள்ளே நுழைந்துள்ளார். உள்ளே வந்த அவன், "யாரோ என்னை கொலை செய்ய துரத்துகிறார்கள், என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள்" என்று பயந்தது போல நடித்து, அந்த பெண்ணிடம் தஞ்சமடைவது போல் நாடகமாடியுள்ளான்.
அவனது பேச்சை கேட்டு அதிர்ச்சியடைந்த ஜெயஸ்ரீ, இதுகுறித்து உடனடியாக கடை உரிமையாளருக்கு தகவல் தெரிவிக்க முயன்றார். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக, பிரபுராஜ் தன் பையிலிருந்த கத்தியை எடுத்து ஜெயஸ்ரீயின் கழுத்தில் வைத்து மிரட்டினான். அவர் பயத்தில் கூச்சலிடாமல் இருக்க, அங்கிருந்த மேஜை மீது 'பெவிக்கியூக் பசை திரவத்தை ஊற்றி, ஜெயஸ்ரீயின் இரண்டு கைகளையும் மேஜையோடு சேர்த்து வலுக்கட்டாயமாக ஒட்டினான்.
கைகள் ஒட்டப்பட்ட நிலையிலும், ஜெயஸ்ரீ தைரியமாக சத்தம் போட்டு அலறினார். இதனால் ஆத்திரமடைந்த கொள்ளையன் பிரபுராஜ், அவரது கழுத்தில் இருந்த சங்கிலியை பறிக்க முயன்றான். பெண்ணின் அலறல் சத்தத்தை கேட்டு, 100 அடி சாலையில் சென்றுகொண்டிருந்த பொதுமக்களும், அக்கம்பக்கத்து கடைக்காரர்களும் கடையை நோக்கி ஓடி வந்தனர். தன்னை சுற்றி அனைவரும் சூழ்ந்திருப்பதை உணர்ந்த பிரபுராஜ், கத்தியை அப்பெண்ணின் கழுத்தில் வைத்து, அருகில் யாராவது வந்தால் கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளார்.
கூட்டத்திலிருந்து தப்பிப்பதற்காக அப்பெண்ணை கேடயமாகபயன்படுத்தி அங்கிருந்து தப்பி ஓட முயன்றான். ஆனால், பொதுமக்கள் அவனை நாலாபுறமும் சுற்றி வளைத்து மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.
கொள்ளை சம்பவம் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பொதுமக்களிடம் இருந்து கொள்ளையனை மீட்டு கைது செய்தனர். இந்த துணிகர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பொதுமக்கள் காட்டிய துணிச்சலை பலரும் பாராட்டி வருகின்றனர்.