தேசிய செய்திகள்

சபரிமலை பக்தர்கள் கவனத்திற்கு.. பம்பை நதியில் ஆடைகளை வீசினால் ரூ.5,000 அபராதம்

பொது இடங்களில் பிளாஸ்டிக் கழிவுகள், திடக்கழிவுகள் மற்றும் மக்கும் கழிவுகள் கொட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை,

சபரிமலைக்கு வரும் பக்தர்கள் பம்பை ஆற்றில் நீராடிவிட்டு ஆடைகளை அங்கேயே வீசி சென்றால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆடைகளை வீசும் பக்தர்கள்

சபரிமலைக்கு வரும் பக்தர்கள் பம்பை ஆற்றில் புனித நீராடுவது வழக்கம். அவ்வாறு நீராடும் போது சிலர் தங்களது ஆடை மற்றும் உடைமைகளை ஆற்றில் விட்டுச் செல்வார்கள். இவ்வாறு கழிவு பொருட்களை வீசுவதால் ஆற்றுநீர் மாசடைவதாக புகார் வந்தது.

இதையடுத்து பம்பை ஆற்றில் ஆடைகளை வீச வேண்டாம் என சபரிமலை வரும் பக்தர்களுக்கு முதல்-மந்திரி வி.டி. சதீசன் தனது 'எக்ஸ்' தளத்தில் 6 மொழிகளில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

ரூ.5 ஆயிரம் அபராதம்

இந்தநிலையில் சபரிமலை கூடுதல் கலெக்டர் திலீப் கே.கைனிக்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சபரிமலை தரிசனத்திற்கு வரும் அய்யப்ப பக்தர்கள் தாங்கள் அணிந்து வரும் ஆடைகள் மற்றும் பிற தனிப்பட்ட பொருட்களை பம்பை மற்றும் அதன் துணை நதிகள், நீராடும் படித்துறைகளில் போடவோ, வீசவோ கூடாது. ஆறுகள், அவற்றின் கரைகள் அல்லது பொது இடங்களில் பிளாஸ்டிக் கழிவுகள், திடக்கழிவுகள் மற்றும் மக்கும் கழிவுகள் கொட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

15 நாட்களுக்குள்

இந்த உத்தரவை மீறி ஆற்றை மாசுபடுத்தி கழிவுகளை கொட்டுபவர்களுக்கு ரூ.5 ஆயிரம் வரை உடனடி அபராதம் விதிக்கப்படும். இந்த அபராத தொகையை 15 நாட்களுக்குள் செலுத்தவில்லையெனில் வழக்குத் தொடர்வது உள்பட கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

வசூலிக்கப்பட்ட அபராத தொகையை ரான்னி-பெருநாடு கிராம பஞ்சாயத்தின் சொந்த நிதியில் சேர்த்து, சபரிமலை மற்றும் பம்பை பகுதிகளில் தூய்மைப் பணி, கழிவு மேலாண்மை மற்றும் நதி சுத்திகரிப்புப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT