புதுடெல்லி,
புற்றுநோய் மருந்துகள் கொள்ளை லாபத்துக்கு விற்கப்படுவதாக புகார்கள் எழுந்ததால், 137 புற்றுநோய் மருந்துகளின் லாப வரம்பு 30 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது. அரசிதழ் அறிவிப்பு மூலம் கடந்த 9-ந் தேதி இந்த விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதற்கிடையே, மருந்தியல் துறையின்கீழ் செயல்படும் தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையம் மாநில மருந்து கட்டுப் பாட்டு அதிகாரிகளுக்கு ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசு நிர்ணயித்த லாபவரம்பில் 137 புற்றுநோய் மருந்துகளும் விற்கப்படுகிறதா என்பதை தீவிரமாக கண்காணிக்குமாறும், அதிக விலைக்கு விற்பது தெரிய வந்தால் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்குமாறும் கூறியுள்ளது. இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கைகளை 16-ந் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறும் தெரிவித்துள்ளது.