லக்னோ ,
உத்தரபிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் காந்த் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாநில நெடுஞ்சாலையில் பயணிகள் சென்ற ஆட்டோ மீது எதிரே அதிவேகமாக வந்த லாரி நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ பலத்த சேதமடைந்து நொறுங்கியது.
சம்பவத்தை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக, ஆட்டோவில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். தகவலறிந்து போலீசார் மற்றும் அவசர உதவி குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
இந்த விபத்தில் 2 பெண்கள் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 4 பேர் பலத்த காயமடைந்த நிலையில் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த விபத்தால் மாநில நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
முதற்கட்ட விசாரணையில், ஆட்டோவில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான பயணிகள் பயணம் செய்தது தெரியவந்துள்ளது. இதுவே உயிரிழப்பை அதிகரிக்க காரணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.