புதுடெல்லி,
அயோத்தி ராமர் கோயிலில் சுவாமிக்கு அளிக்கப்பட்ட காணிக்கை பணம் மற்றும் நகைகள் காணாமல் போனதாக புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு(எஸ்.ஐ.டி.) அமைத்து உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.
இதன்படி, ராமர் கோவில் அறக்கட்டளை மற்றும் வங்கியுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் உட்பட சுமார் 150 பேரிடம் விசாரணை நடத்திய எஸ்.ஐ.டி. அதிகாஅரிகள், இது தொடர்பாக 20 பக்க இடைக்கால அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளனர். இந்த அறிக்கையின் அடிப்படையில் 8 பேர் மீது உத்தர பிரதேச காவல் துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து பேசிய உத்தர பிரதேச மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், “அயோத்தி என்பது நம் அனைவரின் நம்பிக்கைக்கும் சனாதன தர்மத்திற்கும் ஒரு அடையாளமாகும்.அயோத்தியின் மீது தவறான பாதையைச் செலுத்த வேண்டாம். பொதுமக்களின் நம்பிக்கையுடன் விளையாடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சனாதன தர்மத்தின் நம்பிக்கையில் யார் தலையிட்டாலும் அவர்கள் அதற்கான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். யாருக்கும் எந்த விலக்கும் அளிக்கப்படாது” என்று தெரிவித்தார்.
இந்நிலையில், அயோத்தி ராமர் கோவில் நன்கொடை முறைகேடு விவகாரம் குறித்து பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-
“அயோத்தி ராமர் கோவிலுக்கு நிலம் வாங்கியது, கோவில் கட்டுமானம் மற்றும் பக்தர்கள் வழங்கிய நன்கொடைகள் ஆகியவற்றில் பெரும் ஊழல் நடைபெற்றுள்ளது. பிரதமருக்கு இது பற்றியெல்லாம் தெரியாமல் இருந்திருக்கக் கூடும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
ராம் கோவில் அறக்கட்டளையின் நிர்வாகிகள் பிரதமராலேயே நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவரும் இந்த அறக்கட்டளையில் இடம்பெற்றுள்ளார். இந்த முறைகேட்டை தடுப்பதற்கு பிரதமர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? இது குறித்து பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும்.
இந்த வழக்கில் 8 பேரைக் கைது செய்தது வெறும் ஏமாற்று வேலை. உண்மையான குற்றவாளிகள் வேறு சிலர் இருக்கிறார்கள். இந்த 8 பேரும் வெறும் பகடைக்காய்களே. பிரதமர் யாரைக் காப்பாற்றுகிறார்? எதற்காகக் காப்பாற்றுகிறார்? என்று நான் அவரிடம் கேட்க விரும்புகிறேன்.
அதேபோல், நன்கொடைகளை திருடியதாகவும், கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளை புண்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகளை இடிக்க ஏன் புல்டோசர்களை பயன்படுத்தவில்லை என்பது குறித்து உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் விளக்கம் அளிக்க வேண்டும்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.