பெங்களூரு,
மைசூரு தசரா விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான விமான சாகச நிகழ்ச்சி, மோசமான வானிலை மற்றும் மேகமூட்டம் காரணமாக பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது. இதனால், நிகழ்ச்சியை காண ஆர்வமுடன் வந்திருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கடும் ஏமாற்றமடைந்தனர்.
உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பொதுமக்களுக்கும். சுற்றுலா பயணிகளுக்கும் கண்கவர் விருந்தாக அமையும் வகையில், அக்டோபர் 18 மற்றும் 19 ஆகிய 2 நாட்கள் பிரமாண்ட விமான சாகச நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
முதல் நாள் விமான சாகச நிகழ்ச்சியை கண்டுகளிக்க மைசூருவில் உள்ள பன்னிமண்டபம் தீ பந்து விளையாட்டு மைதானம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்திருந்தனர். நாட்டின் பெருமைமிக்க சூர்யகிரண் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களின் சாகசங்களை நேரில் காண பொதுமக்கள் மிகுந்த உற்சாகத்துடன் காத்திருந்தனர்.
நேற்று முன்தினம் இரவு முழுவதும் அப்பகுதியில் பரவலாக மழை பெய்திருந்தது. இதன் காரணமாக, நேற்று காலை முதலே வானம் முழுவதும் கருமேகங்கள் சூழ்ந்து கடும் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. எந்த நேரத்திலும் மீண்டும் மழை பெய்யக்கூடும் என்ற சூழல் நிலவியதுடன், விமான ஓட்டிகளுக்கு பார்வைத்திறன் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதன் காரணமாக, பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு திட்டமிடப்பட்ட சாகசங்கள் உடனடியாக மாற்றியமைக்கப்பட்டன. சூர்யகிரண் விமானங்கள் 3 முறை மட்டுமே வானில் பறந்து சாகசங்களை செய்துவிட்டு திரும்பின. அதனைத் தொடர்ந்து நடத்தப்படவிருந்த ஹெலிகாப்டர்களின் சாகச காட்சிகள் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டன.
விமான சாகச நிகழ்ச்சி பாதியிலேயே நிறுத்தப்பட்டதால், மைதானத்தில் நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள் மற்றும் குடும்பத்தினரிடையே பெரும் ஏமாற்றம் ஏற்பட்டது. ஏமாற்றத்துடன் அவர்கள் தங்களது வீடுகளுக்கு திரும்பினர்.
இந்த சம்பவம் குறித்து தசரா கமிட்டி அதிகாரிகள் கூறுகையில், "வானிலை சீராக இல்லாததாலும், பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இன்று வானிலை எப்படி இருக்கிறது என்பதை வானிலை ஆய்வு மைய அறிக்கையின் மூலம் தெரிந்து கொண்டு. அதற்கேற்ப விமான சாகச நிகழ்ச்சி நடத்துவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளனர்.
இதேபோல தசரா விழாவை முன்னிட்டு, நஞ்சன்கூடு டவுன் ஜே.எஸ்.எஸ். மங்கள மண்டபத்தில் யோகா நிகழ்ச்சி மற்றும் ரெயில் நிலையம் அருகில் உள்ள ஜே.கே. மைதானத்தில் செல்லப்பிராணிகள் கண்காட்சியும் நடந்தது.