புதுடெல்லி,
ரம்ஜான் பண்டிகைக்கு அடுத்தப்படியாக இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையாக பக்ரீத் உள்ளது. இறை நம்பிக்கை, இரக்கம், சகோதரத்துவம், நல்லிணக்கம், தியாகத்தைப் போற்றும் வகையில் இஸ்லாமிய மாதமான துல்ஹிஜ்ஜின் 10ம் தேதி இறைவனின் கட்டளையை நிறைவேற்றும் பொருட்டு தனது மகனை பலியிட துணிந்த இறைத் தூதர் இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக ஆண்டுதோறும் பக்ரீத் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை இன்று இஸ்லாமியர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. பக்ரீத் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்கள் அனைவரும் புத்தாடை அணிந்து ஆண்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில் இன்று அதிகாலையில் புத்தாடை அணிந்து இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். பக்ரீத் பண்டிகை கொண்டாடிய முஸ்லிம்கள், ஏழை மக்களுக்கு குர்பானியாக ஆடு, மாடு உள்ளிட்டவற்றின் இறைச்சியை தானமாக அளித்தனர்.
பக்ரீத் பண்டிகை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
"பக்ரீத் பண்டிகை முன்னிட்டு, எனது அனைத்து சக குடிமக்களுக்கும், குறிப்பாக எனது இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தத் பண்டிகை அர்ப்பணிப்பு, தியாகம் மற்றும் சுயநலமின்மையின் அடையாளமாகும். இந்தத் பக்ரீத் திருநாள் மனிதநேயத்திற்கு, குறிப்பாக சமூகத்தில் பின்தங்கிய பிரிவினருக்குச் சேவை செய்ய நமக்கு ஊக்கமளிக்கிறது. இந்த வேளையில், சமூகத்தில் அன்பையும் நல்லிணக்கத்தையும் பரப்புவதற்குக் கூடுதல் அர்ப்பணிப்புடன் நாம் அனைவரும் முன்னோக்கிச் செல்வோம்." இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.