தேசிய செய்திகள்

பக்ரீத் பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து

நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை இன்று இஸ்லாமியர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, நாட்டுமக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சமூகத்தில் சகோதரத்துவ உணர்வு மேலும் வலுப்பெற இந்த பண்டிகை உதவ வேண்டும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டதாவது: பக்ரீத் நல்வாழ்த்துகள்! இந்த பண்டிகை நமது சமூகத்தில் சகோதரத்துவத்தையும் மகிழ்ச்சியையும் மேலும் அதிகரிக்கட்டும். அனைவருக்கும் வெற்றியும் நல்ல உடல்நலமும் கிடைக்க பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

பக்ரீத் பண்டிகை

ரம்ஜான் பண்டிகைக்கு அடுத்தப்படியாக இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையாக பக்ரீத் உள்ளது. இறை நம்பிக்கை, இரக்கம், சகோதரத்துவம், நல்லிணக்கம், தியாகத்தைப் போற்றும் வகையில் இஸ்லாமிய மாதமான துல்ஹிஜ்ஜின் 10ம் தேதி இறைவனின் கட்டளையை நிறைவேற்றும் பொருட்டு தனது மகனை பலியிட துணிந்த இறைத் தூதர் இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக ஆண்டுதோறும் பக்ரீத் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை இன்று இஸ்லாமியர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. பக்ரீத் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்கள் அனைவரும் புத்தாடை அணிந்து ஆண்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில் இன்று அதிகாலையில் புத்தாடை அணிந்து இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். பக்ரீத் பண்டிகை கொண்டாடிய முஸ்லிம்கள், ஏழை மக்களுக்கு குர்பானியாக ஆடு, மாடு உள்ளிட்டவற்றின் இறைச்சியை தானமாக அளித்தனர்.