தேசிய செய்திகள்

பள்ளிகளுக்கு அருகில் ‘ஸ்டிங்’ எனர்ஜி பானம் விற்க தடை: மந்திரி நர்ஹரி ஜிர்வால் அறிவிப்பு

இதனால் ஏற்படும் உடல்நலகேடுகள் குறித்து பள்ளி அளவில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு பிரசாரங்களை நடத்துமாறு பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மும்பை,

சட்டசபையில் பா.ஜனதா எம்.எல்.ஏ. விக்ரம் பச்சுதே பள்ளி மாணவர்களின் ஆரோக்கியதை கெடுக்கும் எனர்ஜி பானங்கள் குறித்து எழுப்பிய கேள்விக்கு, உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை மந்திரி நர்ஹரி ஜிர்வால் பதில் அளித்து கூறியதாவது:-

நடவடிக்கை

பள்ளி வளாகத்தில் இருந்து 500 மீட்டர் சுற்றளவுக்குள் 'ஸ்டிங்' எனர்ஜி பானங்கள் அல்லது வேறு ஏதேனும் போதை பொருட்கள் விற்கப்பட்டால், அதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதனை தீவிரமாக கண்காணிக்குமாறு உணவு மற்றும் மருந்து நிர்வாக துறைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, எனர்ஜி பானங்களில் அதிகளவில் கபைன் மற்றும் சர்க்கரை கலந்துள்ளது. இதனால் ஏற்படும் உடல்நலகேடுகள் குறித்து பள்ளி அளவில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு பிரசாரங்களை நடத்துமாறு பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.