தேசிய செய்திகள்

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் டெலிகிராம் மீது தடை – ராகுல் காந்தி கடும் விமர்சனம்

வினாத்தாள் கசிவு மாபியா கும்பல்களுக்கு எதிராக நேரடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புது டெல்லி,

இளநிலை மருத்துவ படிப்புகளில் மாணவ மாணவிகள் சேர்ந்து படிப்பதற்காக நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வு, நடப்பு ஆண்டின் மே 3-ந்தேதி நாடு முழுதும் நடந்தது. 22 லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில், தேர்வுக்கு முன்னரே வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்தது.

நீட் தேர்வு ஜூன் 21-ம் தேதி நடத்தப்படும்

ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களில் தேர்வுக்கு முன்பே வினாத்தாள் கசிந்து, விற்பனை செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் பலர் கைது செய்யப்பட்டனர். இதனால் நடந்து முடிந்த நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை ரத்து செய்தது. நீட் தேர்வு ஜூன் 21-ம் தேதி நடத்தப்படும் என தேசிய தேர்வை முகமை அறீவித்தது.

டெலிகிராம் செயலி

இந்த நிலையில், தேசிய தேர்வு முகமையின் கோரிக்கையை ஏற்று, நாடு முழுவதும் டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு தற்காலிக தடை விதித்துள்ளது. மே 3-ல் நடந்த நீட் தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே டெலிகிராம் செயலியில் பரவியதால் தற்போது இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் டெலிகிராம் மீது விதிக்கப்பட்ட தடை தொடர்பாக, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

மத்திய அரசின் தீர்வா?

திருடனை பிடிப்பதற்கு பதில், பாதிக்கப்பட்ட வீட்டையே பூட்டுவது சரியான தீர்வா? டெலிகிராம் தடைதான் வினாத்தாள் கசிவை தடுக்க மத்திய அரசின் தீர்வா?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், "பல லட்சம் இந்திய மாணவர்கள் படிப்பிற்காக டெலிகிராமை நம்பியுள்ளனர். அடுத்து எதை தடை செய்ய போகிறார்கள்? வாட்ஸ்ஆப்பையா?" என்றும் விமர்சித்துள்ளார்.

அரசின் நிழலில்தான் வளர்கின்றன

"நாடகங்களை நிறுத்திவிட்டு, வினாத்தாள் கசிவு மாபியா கும்பல்களுக்கு எதிராக நேரடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கும்பல்கள் அரசின் நிழலில்தான் வளர்கின்றன" எனவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் அரசியல் விவாதமாக மாறியுள்ள நிலையில், டெலிகிராம் மீதான நடவடிக்கையை எதிர்த்து பல தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.