மும்பை,
இந்தியாவில் வங்கிகள் வழங்கிய கடன்களின் வளர்ச்சி கடந்த 30 மாதங்களில் இல்லாத அளவுக்கு 19.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. பண்டிகைக் காலத்தில் நுகர்வோர் பொருட்கள் வாங்குவதற்காக கடன் பெறுவது அதிகரித்ததே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி அக்டோபர் 31-ந்தேதி நிலவரப்படி வங்கிகளின் கடன் வளர்ச்சி ஆண்டுக்கு 19.54 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இந்த வளர்ச்சி 15.9 சதவீதமாக இருந்தது.
அக்டோபர் 31-ந்தேதி நிலவரப்படி வங்கிகள் வழங்கிய மொத்த கடன் ரூ.231.82 லட்சம் கோடியாக இருந்தது. இதற்கு முந்தைய 2 வாரங்களில் ரூ.227.43 லட்சம் கோடியாக இருந்த நிலையில், தற்போது 1.93 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோல், வங்கிகளில் உள்ள மொத்த வைப்புத்தொகை ரூ.282.51 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
முந்தைய 2 வாரங்களில் ரூ.278.76 லட்சம் கோடியாக இருந்தது. ஆண்டுக் கணக்கில் வைப்புத்தொகை வளர்ச்சி 16.86 சதவீதமாக உள்ளது. பண்டிகைக் காலத்தில் வீட்டு உபயோகப் பொருட்கள், மின் னணு சாதனங்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்காக மக்கள் அதிக அளவில் கடன் பெறுவது வழக்கம்.
இந்தக் காலத்தில் கடன் தேவை அதிகரித்திருப்பது வங்கிக் கடன் வளர்ச்சியிலும் பிரதிபலித்துள்ளது. மேலும், மத்திய ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, அக்டோபர் 31-ந் தேதி நிலவரப்படி வங்கிகளின் மொத்த முதலீடுகள் ரூ.77.03 லட்சம் கோடியாக உள்ளன. இது கடந்த ஆண்டு இதே காலத்தில் இருந்த ரூ.70.49 லட்சம் கோடியை விட அதிகமாகும்.