புதுடெல்லி,
வாரம் 5 நாட்கள் பணியை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலுயுறுத்தி, செப்டம்பர் 11-ந் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபட வங்கி ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.
9 வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்கள் இணைந்த உயரிய அமைப்பு, ஐக்கிய வங்கி சங்கங்கள் கூட்ட மைப்பின் கூட்டம் நடந்தது. அதில், வங்கி ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அரசு எதிர்மறை அணுகு முறையை பின்பற்றுவதாகவும். அதனால் செப்டம்பர் 11-ந் தேதி நாடுதழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து ஐக்கிய வங்கி சங்கங்கள் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
வாரத்துக்கு 5 நாட்கள் வேலை என்ற கோரிக்கையை கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் 8-ந் தேதி நடந்த இருதரப்பு கூட்டத் தில் இந்திய வங்கிகள் சங்கம் ஏற்றுக்கொண்டது. அதற்கு பதிலாக திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை நாள்தோறும் பணிநேரத்தை 40 நிமிடங்கள் அதிகரிக்கவும் ஒப்புக் கொள்ளப்பட்டது. மத்திய அரசுக்கும் பரிந்துரை அனுப்பியது. ஆனால் 2 ஆண்டுகளாக மத்திய அரசு எந்த முடிவும் எடுக்காமல் நிலுவையில் வைத்துள்ளது.
மேலும், 4-ம் நிலை மற்றும் அதற்கு மேற்பட்ட அதிகாரிகளுக்கான செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகை திட்டம் எங்களுக்கு ஏற்படையது அல்ல. இது, ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட தீர்வுக்கு எதிரானது. இவை உள்பட நிலுவையில் உள்ள கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்டம்பர் 11-ந் தேதி நாடுதழுவிய வேலைநிறுத்தம் நடத்த முடிவு செய்துள்ளோம்.
அதன்பிறகும் கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால், செப்டம்பர் 28-ந் தேதியில் இருந்து 3 நாட்கள் தொடர் வேலைநிறுத்தத் தில் ஈடுபடுவோம். அக்டோபர் 26-ந் தேதியில் இருந்து காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
செப்டம்பர் 12 மற்றும் 13-ந் தேதி, இரண்டாவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை, வங்கிகளுக்கு விடுமுறை ஆகும். 14-ந் தேதி, விநாயகர் சதுர்த்திக்காக விடுமுறை ஆகும். எனவே, செப்டம்பர் 11-ந் தேதி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் நடந்தால், தொடர்ந்து 4 நாட்கள் வங்கிச் சேவைகள் பாதிக்கப்படும்.