கொல்கத்தா,
மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை ஆங்கிலத்தில் வெஸ்ட் பெங்கால் என்பதற்கு பதிலாக 'பச்சிம் பங்கா' என மாற்றுவதற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான தீர்மானம் டிசம்பர் 9ம் தேதி சட்டப்பேரவையில் கொண்டு வரப்படும் என அம்மாநில முதல்-மந்திரி சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேற்குவங்காள தலைநகர் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்-மந்திரி சுவேந்து அதிகாரி, " மாநிலத்தின் பெயர் வங்காள மொழியில் இருப்பதை போலவே ஆங்கிலத்திலும் 'பச்சிம் பங்கா' என்றே எழுதப்படும்.
இதற்கான தீர்மானம் டிசம்பர் 9ம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும், பின்னர் அந்த தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பப்படும் என்று தெரிவித்தார். மேற்கு வங்காள சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 4 முதல் 14ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தொடரில் பெயர் மாற்றத் தீர்மானம் மட்டுமின்றி, மேலும் 8 மாநில மசோதாக்களையும் அரசு அறிமுகப்படுத்த உள்ளது. இந்திய அரசியல் சாசனத்தின் 3வது பிரிவின்படி, ஒரு மாநிலத்தின் பெயரை மாற்றுவதற்கு அரசியல் சாசனத் திருத்தம் தேவையில்லை. இதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த ஜனாதிபதியின் பரிந்துரை அவசியம். மேலும், அந்த மசோதா தொடர்பாக மாநிலச் சட்டப்பேரவையின் கருத்துகளைக் ஜனாதிபதி கேட்டறிய வேண்டும்.
எனினும், மாநிலச் சட் டப்பேரவையின் கருத்து நாடாளுமன்றத்தைக் கட்டுப்படுத்தாது. நாடாளுமன் றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மையுடன் மசோதா நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைத்த பின்னரே பெயர் மாற்றம் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரும். எனவே, தற்போதைய அமைச்சரவை ஒப்புதல் என்பது பெயர் மாற்றத்துக்கான முதல் கட்ட நடவடிக்கை மட்டுமே என்று கூறப்படுகிறது.
மேற்கு வங்காளத்தின் பெயரை மாற்றுவதற்கான முயற்சி ஏற்கெனவே பல முறை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 1999ம் ஆண்டு இடதுசாரி ஆட்சிக் காலத்திலும், 2011ம் ஆண்டு மம்தாபானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியிலும் 'பச்சிம்பங்கா' என்ற பெயரைச் சூட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
2016ம் ஆண்டு வங்காள மொழியில் 'பங்களா', ஆங்கிலத்தில் பெங்கால்', இந்தியில் 'பெங்கால்' என வெவ்வேறு பெயர்களை முன்மொழிந்தபோது, ஒரே மாநிலத்துக்கு வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு பெயர்கள் இருக்கக் கூடாது என மத்திய அரசு எதிர்ப்புத் தெரிவித்தது.
இதையடுத்து, 2018ம் ஆண்டு மூன்று மொழிகளிலும் 'பங்களா' என்ற பெயரைச்சூட்ட முன் வைக்கப்பட்ட பரிந்துரைக்கும், வங்கதேசத்தின் பெயருடன் ஒத்திருப்பதாகக் கூறி மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை.
தற்போது 'பச்சிம் பங்கா' என்ற பெயரைத் தேர்வு செய்திருப்பதற்குப் பின்னால் அரசியல் மற்றும் நிர்வாகக் காரணங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
1947ம் ஆண்டு இந்தியப் பிரிவினையின்போது வங்காள மாகாணம் பிரிக்கப்பட்டு மேற்கு வங்காளம் உருவான வரலாற்றை இந்தப் பெயர் நினைவுபடுத்தும் என பா.ஜ.க. கருதுகிறது.
மேலும், 'வெஸ்ட் பெங்கால்' என்ற பெயர் ஆங்கில அகரவரிசையில் 'டபிள்யூ' எழுத்தில் தொடங்குவதால் தேசிய அளவிலானகூட்டங்களில் மாநிலம் கடைசிப் பகுதியில் இடம்பெறுகிறது. 'பச்சிம் பங்கா' என மாற்றினால் 'பி' வரிசைக்கு முன்னேறமுடியும் என்பதும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, 1947ம் ஆண்டு ஜூன்20ம்தேதி வங்காள மாகாணத்தைப்பிரித்து மேற்கு வங்கத்தை உருவாக்க ஆதரவாகச் சட்டப்பேரவையில் வாக்கெடுப்பு நடைபெற்றது.
இந்த வரலாற்று நிகழ்வை நினைவுகூரும் வகையில், ஜூன் 20ம் தேதியை மேற்கு வங்க நிறுவன நாளாக 2023ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. தற்போது மாநிலஅமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள பெயர் மாற்றத் தீர்மானம் டிசம்பர் 9ம் தேதி சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட உள்ளது. அதன்பிறகு மத்திய அரசின் பரிசீலனைக்கும், நாடாளுமன்ற ஒப்புதலுக்கும் உட்படுத்தப்பட வேண்டும் என்பதால், பெயர் மாற்றம் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வர இன்னும் பல கட்டங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.