வாக்களிப்பதற்காக வரிசையில் நிற்கும் வாக்காளர்கள் 
தேசிய செய்திகள்

மேற்கு வங்க முதற்கட்ட தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி சுமார் 90 சதவீதம் வாக்குப்பதிவு

மேற்கு வங்க முதற்கட்ட தேர்தலில் 5 மணி நிலவரப்படி 89.93 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

கொல்கத்தா,

294 சட்டசபை தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காள மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. இடையே கடும் போட்டி நிலவுகிறது. முதற்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் கடந்த 21-ந்தேதி மாலை 6 மணியுடன் முடிவடைந்த நிலையில் இன்று (23.4.2026) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 152 தொகுதிகளிலும் காலை முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

முதல் இரண்டு மணி நேரங்களில் 18.76 சதவீதமாக இருந்த வாக்குப்பதிவு, 11 மணி நிலவரப்படி 41.11 சதவீதத்தை எட்டியது. ஒரு மணிக்கு 62.18 சதவீதமாக உயர்ந்தது. பிற்பகல் 3 மணிக்கு 78 சதவீதமாக அதிகரித்தது. நாள் முழுவதும் வாக்காளர்களின் எழுச்சியையே இது காட்டுகிறது.

தொடர்ந்து வாக்காளர்கள் வருகை அதிகரித்தவண்ணம் இருப்பதால், இறுதி வாக்குப்பதிவு விகிதம் கணிசமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜனநாயக கடமையாற்றிய மகிழ்ச்சியில் பெண்கள்

எலியும் பூனையுமாக இருக்கும் இந்த இரு கட்சியினரும் தேர்தல் பிரசாரத்தின்போது கடும் வார்த்தைப் போரில் ஈடுபட்டனர். இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் ஆங்காங்கே மோதல் ஏற்பட்டது.

தாக்குதல்

அசன்சோல் தெற்கு சட்டமன்ற தொகுதியில் பாஜக பெண் வேட்பாளர் அக்னிமித்ரா மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியது. பன்பூர் நகரின் ரஹ்மத் நகர் பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடிக்கு சென்று வாக்குப்பதிவை பார்வையிட்டு திரும்பியபோது ஒரு கும்பல் அவரது கார் மீது கற்களை வீசி தாக்கி உள்ளனர். இதில், காரின் பின்பக்க கண்ணாடி முழுமையாக நொறுங்கியது. வேட்பாளர் அக்னிமித்ரா காயமின்றி உயிர்தப்பினார்.

முர்ஷிதாபாத்தின் நவோடா பகுதியில், ஏஜேயுபி கட்சி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். இதையடுத்து மத்திய பாதுகாப்பு படையினர் தடியடி கூட்டத்தை கலைத்தனர்.

மோதல்

பீர்பூம் மாவட்டத்தின் லாப்பூர் பகுதியில், பா.ஜ.க. வேட்பாளர் தேபாசிஸ் ஓஜாவின் வாக்குச்சாவடி முகவர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்படடது. இந்த தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதேபோன்ற மால்டா மாவட்டத்தின் சஞ்சல் பகுதியிலும் பாஜக வாக்குச்சாவடி முகவர் தாக்கப்பட்டதாகவும், அவரது ஆடைகள் கிழிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

முராராய் தொகுதியில் காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களிடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு பேர் காயமடைந்தனர். முர்ஷிதாபாத்தின் டோம்காலில் உள்ளூர் மக்கள் தங்களை வாக்குச் சாவடிகளுக்குச் செல்ல விடாமல் சிலர் தடுப்பதாக குற்றம் சாட்டினர். இதையடுத்து வாக்காளர்களுக்கு பாதுகாப்பு அளிக்க தேர்தல் ஆணையம் பாதுகாப்புப் படையினரை நியமித்தது.

இந்தநிலையில், மேற்கு வங்க முதற்கட்ட தேர்தலில் 5 மணி நிலவரப்படி 89.93 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.