பெங்களூரு ,
பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டியில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் ரூ.75 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை திருடியது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.
பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட விவேகானந்தநகரை சேர்ந் தவர் எபினேசர். இவர், தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். அவர்களில் மூத்த மகனுக்கு கடந்த 17-ந் தேதி திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், எபினேசர் அவரை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.
மேலும், அவரை கவனித்துக்கொள்ள எபினேசர், அவரது மனைவியுடன் ஆஸ்பத்திரியிலேயே தங்கினார். இதனால், 2-வது மகன் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இந்நிலை யில், கடந்த 19-ந் தேதி நண்பர்கள் வீட்டுக்கு சென்ற எபினேசரின் 2-வது மகன் அன்று முழுவதும் அங்கேயே தங்கினார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் எபினேசர் வீட்டின் முன்கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
பின்னர் படுக்கை அறையில் இருந்த பீரோவின் கதவையும் உடைத்து, அதில் இருந்த தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிவிட்டு தப்பிச் சென்றனர். இதற்கிடையில், ஆஸ்பத்திரியில் இருந்து எபினேசர் வீட்டுக்கு திரும்பியபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததால் அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ.75 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து புகாரின் பேரில், எலெக்ட்ரானிக் சிட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், தீவிர விசாரணை நடத்தி, திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.