தேசிய செய்திகள்

‘ஸ்பேஸ் எக்ஸ்’ மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட பெங்களூரு தனியார் நிறுவன செயற்கைக்கோள் - பிரதமர் மோடி பாராட்டு

கலிபோர்னியாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ‘மிஷன் திருஷ்டி’ செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

பெங்களூருவைச் சேர்ந்த ‘கேலக்ஸ்ஐ’(GalaxEye) என்ற தனியார் நிறுவனம், ‘மிஷன் திருஷ்டி’(Mission Drishti) என்ற செயற்கைக்கோளை உருவாக்கியுள்ளது. இது உலகின் முதல் ‘ஆப்டோசார்’ (OptoSAR) செயற்கைக்கோள் என ‘கேலக்ஸ்ஐ’ நிறுவனம் கூறியுள்ளது. மேலும், இது எலக்ட்ரோ-ஆப்டிகல் (EO) மற்றும் சிந்தடிக் அபெர்ச்சர் ரேடார் (SAR) சென்சார்களை ஒரே செயல்பாட்டுத் தளத்தில் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ‘மிஷன் திருஷ்டி’ செயற்கைக்கோள், ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் ‘பால்கன் 9’ ராக்கெட் மூலம், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த திட்டத்தின் வெற்றிக்காக ‘கேலக்ஸ்ஐ’ நிறுவனத்திற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கேலக்ஸ்ஐ நிறுவனத்தின் 'மிஷன் திருஷ்டி’ நமது விண்வெளிப் பயணத்தில் ஒரு பெரும் சாதனையாகும். உலகின் முதல் ‘ஆப்டோசார் ’ செயற்கைக்கோள் மற்றும் இந்தியாவில் தனியார் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய செயற்கைக்கோள் ஆகிய பெருமைகளை பெற்றுள்ள இந்த திட்டமானது, தேசத்தைக் கட்டியெழுப்புவதில் நமது இளைஞர்கள் கொண்டிருக்கும் பேரார்வத்திற்கு ஓரு சான்றாக விளங்குகிறது” என்று பதிவிட்டுள்ளார்.