தேசிய செய்திகள்

'டேட்டிங்' செயலி மூலம் பழக்கம்.. கம்ப்யூட்டர் என்ஜினீயரிடம் இளம்பெண் செய்த செயலால் அதிர்ச்சி

காதலர்கள் இரண்டு பேரும் தங்களது குடும்பத்தினரிடம் பேசிவிட்டு, திருமணம் செய்ய தயாரானார்கள்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூரு தென்கிழக்கு மண்டல போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் சவுரப் துபே. கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் 15-ந் தேதி 'டேட்டிங்' செல்போன் செயலி மூலமாக ரியா அகர்வால் என்ற இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் அவர்களுக்குள் நாளடைவில் காதலாக மாறியது.

வாட்ஸ்-அப் வீடியோ

சவுரப், ரியா தங்களது செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டு பேசி வந்தனர். அத்துடன் வாட்ஸ்-அப் வீடியோ அழைப்பிலும் தினமும் 2 பேரும் பேசி வந்துள்ளனர். இதையடுத்து, சவுரப்பை திருமணம் செய்ய ரியாவும் முடிவு செய்தார். இதற்கு சவுரப் சம்மதம் தெரிவித்தார். 2 பேரும் தங்களது குடும்பத்தினரிடம் பேசிவிட்டு, திருமணம் செய்ய தயாரானார்கள்.

ஆன்லைன் பங்கு வர்த்தகம்

இதற்கிடையில், ஆன்லைன் பங்கு வர்த்தகத்தில் தான் பணம் முதலீடு செய்து வருவதாகவும், அதில் தனக்கு அதிக லாபம் கிடைப்பதாகவும் ரியா கூறியுள்ளார். அத்துடன் சவுரப்பையும் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்யும்படி அவர் வலியுறுத்தியுள்ளார். வருங்கால மனைவி வற்புறுத்தியதால் சவுரப்பும் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்ய சம்மதித்தார். அதன்படி, கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து மே மாதம் வரை 3 மாதத்தில் ரூ.1.66 கோடியை சவுரப் முதலீடு செய்தார்.

வங்கி கணக்கில் ரூ.4,250

ரியா கூறிய வங்கி கணக்குகளில் அவர் பணத்தை முதலீடு செய்திருந்தார். அந்த வங்கி கணக்குகளுக்கு வரும் லாபத்தையும், முதலீட்டையும் தேவையெனில் சவுரப் எடுத்து கொள்ளலாம் என்று ரியா கூறி இருந்தார். இதையடுத்து, சவுரப்புக்கு பணம் தேவைப்பட்டதால் வங்கி கணக்குகளில் இருந்த பணத்தை எடுக்க முயன்றார். ஆனால் வெறும் ரூ.4,250 மட்டுமே இருந்தது.

உடனே அவர், ரியாவை தொடர்பு கொண்டார். அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. பல முறை ரியாவை தொடர்பு கொள்ள முயன்றும் சவுரப்பால் முடியவில்லை. அப்போது டேட்டிங் செயலி மூலமாக பழகி தன்னிடம் ரூ.1.66 கோடியை வாங்கி ரியா மோசடி செய்தது சவுரப்புக்கு தெரியவந்தது. இதுகுறித்து தென்கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசில் சவுரப் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான இளம்பெண்ணை வலைவீசி தேடி வருகின்றனர்.