பாட்னா,
பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்தவர் ஆயுஷ் மருத்துவர் பவன். இவருக்கு தீஷா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணுடன் கடந்த 25-ந்தேதி திருமணம் நடைபெற்றது. ஆடம்பரமான முறையில் நடைபெற்ற இந்த திருமண விருந்தில் ஏராளமான விருந்தினர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
திருமணத்திற்கு அடுத்த நாள்(26-ந்தேதி) மணமகனின் ஊரில் வைத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி, அன்றைய தினம் மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. நிகழ்ச்சி நிறைவடையப் போகும் சமயத்தில் மணமகன் பவனுக்கு திடீரென மேடையில் வைத்தே மயக்கம் ஏற்பட்டது.
மேடையில் நின்ற மணமகன் மயங்கி விழுந்ததைப் பார்த்து உறவினர்கள் பதறியடித்துக் கொண்டு அவரை மீட்டு, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனையில் பவனை சோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
கணவன் உயிரிழந்த தகவலை அறிந்ததும் புதுமணப்பெண் தீஷா அதிர்ச்சியில் மயக்கமடைந்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்டன. திருமணமான மறுநாளே மணமகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.