தேசிய செய்திகள்

ஆஸ்பத்திரியில் திடீரென பரவிய தீ: 95 வயது மூதாட்டியின் அசாத்திய செயலால் காப்பாற்றப்பட்ட 20 உயிர்கள்

இந்த தீ விபத்தில் 4 நோயாளிகள் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

பாட்னா,

பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பிரபல ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரியில் 5-வது மாடியில் உள்ள ஐசியூ (ICU) அவசரச் சிகிச்சை பிரிவில் நேற்று நள்ளிரவு 3:30 மணியளவில் எதிர்பாராத விதமாக திடீரென பயங்ர தீ விபத்து ஏற்பட்டது.

இந்தநிலையில், அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த 95 வயது மூதாட்டி ஒருவர் தனது அசாத்திய செயலால் 20க்கும் மேற்பட்ட உயிர்களை காப்பாற்றியா சம்பவம் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. இது சம்பவம் குறித்து வருமாறு:-

ஆஸ்பத்திரியில் தீ விபத்து

சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்சனை காரணமாக அதே ஐசியூ வார்டில் ஆக்சிஜன் உதவியுடன் அனுமதிக்கப்பட்டிருந்த சப்ரா மேக் பகுதியைச் சேர்ந்த ராதா தேவி என்ற 95 வயது மூதாட்டி, நள்ளிரவில் தீப்பிடித்து அறை முழுவதும் நச்சுப் புகை சூழ்ந்ததைக் கண்டு சற்றும் பதறாமல், தனது முகத்தில் இருந்த ஆக்சிஜன் மாஸ்க்கை அவரே தைரியமாக இழுத்துக் கழற்றி எறிந்துள்ளார். பின்னர் தட்டுத்தடுமாறி கரும் புகையைத் தாண்டி வெளியே ஓடிவந்து, கிழ் மாடியில் இருந்த நர்சிடம் சத்தம்போட்டு தீ விபத்து குறித்து கூறியுள்ளார்.

மூதாட்டி கொடுத்த தகவல்

மூதாட்டி கொடுத்த அவசரத் தகவலால் அதிர்ச்சியடைந்த மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்க, அதிகாரி ராம்நிவாஸ் பாண்டே தலைமையிலான குழுவினர் விரைந்து வந்து தங்களின் உயிரைப் பணயம் வைத்து ஐசியூவில் இருந்த 15 முதல் 20 நோயாளிகளைப் பத்திரமாக மீட்டு வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த தீ விபத்தில் 4 நோயாளிகள் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். 95 வயது பாட்டி ஒருவர் தனது அசாத்திய துணிச்சலால் 20-க்கும் மேற்பட்ட உயிர்களைக் காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவம் பீகார் மாநிலத்தையே வியப்பில் ஆழ்த்தியது.