பாட்னா
பீகாரில் ஓடும் ரெயிலில் இருந்து பயணிகளைக் கீழே தள்ளி கொலை செய்து வந்த ‘சைக்கோ கில்லர்’ ஒருவரை ரெயில்வே போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
பீகார் மாநிலம், போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள பரிஸ்வான் கிராமத்தைச் சேர்ந்தவர் ரோஹித் திவாரி (வயது 25). இவர் ரெயில்களில் சிறப்பு அதிரடிப் படை அதிகாரி போல ஆள்மாறாட்டம் செய்து வந்துள்ளார். மேலும், ரெயிலின் பொது மற்றும் மாற்றுத்திறனாளிகள் பெட்டிகளில் பயணிக்கும் எளிய இளம் தொழிலாளர்களைக் குறிவைத்து தாக்குவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
இந்த நிலையில் நிதின் குமார் (வயது 21) என்ற இளைஞர் கடந்த 19-ந்தேதி அன்று, ஹைதராபாத்தில் இருந்து ரெயிலில், தனது ஊரான பீகாரின் வைஷாலிக்கு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, அந்த இளைஞரை ரோஹித் திவாரி பிணைக் கைதியாகப் பிடித்துள்ளார். மேலும் அவரது குடும்பத்தினரிடம் ரூ.10,000 பணம் கேட்டு மிரட்டியுள்ளார். பணம் கிடைக்காததால் நிதினின் கை, கால்களைக் கயிற்றால் கட்டி ஓடும் ரெயிலில் இருந்து வெளியே தள்ளிவிட்டுக் கொலை செய்துள்ளார்.
இதற்கு முன்பாக, கடந்த 6-ந்தேதி அன்று கைலாஷ் குமார் என்ற பயணி இதே பாணியில் ரெயிலில் இருந்து தள்ளப்பட்டு கொலை செய்யப்பட்டார். மேலும் அவரோடு பயணித்த ரித்தேஷ் குமார் என்பவரையும் வெளியே தள்ளிவிட்டார். ஆனால், அவர் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் பிழைத்து, போலீசாரிடம் குற்றவாளியின் அடையாளங்களை விவரித்தார். இதையடுத்து போலீசார் தொழில்நுட்பக் கண்காணிப்பு மற்றும் செல்போன் இருப்பிடத்தைக் கொண்டு, கடந்த 22-ந்தேதி அன்று வாரணாசி அருகே மோகன்சராய் பகுதியில் ‘சைக்கோ கில்லர்’ திவாரியை அதிரடியாக கைது செய்தனர்.
போலீஸ் விசாரணையில், ரோஹித் திவாரி ஏற்கனவே பீகார் ரெயில்வே வழக்குகளில் கைதாகி 25 மாதங்கள் சிறையில் இருந்தவர் என்பது தெரியவந்துள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் இவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். ஜாமீனில் வந்த குறுகிய காலத்திற்குள் அடுத்தடுத்து இந்த கொடூர கொலைகளைச் செய்துள்ளார்.
கைது செய்யப்பட்ட ரோஹித்திடமிருந்து உயிரிழந்த கைலாஷ் குமாரின் அடையாள அட்டைகள் மற்றும் பர்ஸ் மீட்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விரைவு நீதிமன்றம் மூலம் விசாரித்து, குற்றவாளிக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர ரெயில்வே போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஓடும் ரெயிலில் நடந்த இந்த தொடர் கொலை சம்பவங்கள் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.