பாட்னா,
பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் "கட்டாய திருமணம்" தொடர்பான ஒரு வழக்கு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பீகார் போலீசில் சேரத் தயாராகிக் கொண்டிருந்த ஒரு இளைஞன் ஒருவர் கடத்தப்பட்டு, போதைப்பொருள் கொடுத்து, கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை இரவு (பிப்ரவரி 7, 2026) நடந்தது. இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
அந்த இளைஞனின் பெயர் நிதிஷ் குமார் என்று தெரிகிறது. பட்டதாரியான இவர் போலீஸ் வேலைக்கு தயாராகி வந்தார். பக்கத்து கிராமமான சக்கரஜா அலி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் ராய். இவரது குடும்பத்தினர் போலீஸ் வேலைக்கு தயாராகி வரும் நிதிஷ் குமாரை தங்களது மருமகனாக்க விரும்பினார்கள். நிதீஷ் குமாரின் நடவடிக்கைகளை சங்கர் ராய் குடும்பத்தினர் கண்காணித்து வந்தனர்.
கடந்த 7-ந்தேதி நிதிஷ்குமார் நூலகத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட சங்கர் ராய் குடும்பத்தினர் காரை எடுத்து வந்து நிதிஷ்குமாரை வலுக்கட்டாயமாக காரில் தூக்கி போட்டு கடத்தி சென்றனர். நிதீஷ்குமார் கத்தி கூச்சலிட்டதால் அவரை சரமாரியாக தாக்கினர். மேலும் நிதிஷ்குமாரின் வாயில் வலுக்கட்டாயமாக போதை மருந்தை ஊற்றினர். சிறிது நேரத்தில் நிதிஷ் குமார் மயக்கமடைந்தார்.
சங்கர் ராய் குடும்பத்தினர் மோர்வாலில் உள்ள கோவிலுக்கு அவரை கொண்டு சென்றனர். தங்களது மகள் லட்சுமி குமாரிக்கு மணப்பெண் அலங்காரம் செய்தனர். அதேபோல் நிதிஷ் குமாருக்கும் புது உடைகளை அணிவித்து அலங்கரித்தனர். பின்னர் வலுக்கட்டாயமாக நிதிஷ் குமாரை லட்சுமி குமாரியின் கழுத்தில் தாலி கட்ட வைத்தனர். அங்கிருந்த ஒருவர் திருமண நிகழ்ச்சிகளை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார். அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.
வீடியோவில் நிதிஷ் முற்றிலும் போதையில் மயக்கமடைந்து இருப்பது தெளிவாகத் தெரிகிறது. ஆச்சரியப்படும் விதமாக, நிதிஷால் மாலையை தானே பிடிக்க முடியவில்லை. இதற்கிடையில், மற்றொரு இளைஞன் வலுக்கட்டாயமாக அவரது கையைப் பிடித்து, சிறுமியின் கழுத்தில் மாலையை அணிவித்தான்.
இந்த சம்பவம் சமஸ்திபூர் மாவட்டத்தின் பட்டோரி போலீஸ் நிலையப் பகுதிக்கு உட்பட்ட சக்ரஜா அலி கிராமத்தில் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த வீடியோ வைரலானதால், கட்டாயத் திருமணங்கள் குறித்த விவாதங்கள் மீண்டும் முழுப் பகுதியிலும் தீவிரமடைந்தன.
இதனிடையே நூலகத்திற்குச் சென்ற மகன் திரும்பி வராததால் இதுகுறித்து அவரின் பெற்றோர் சமஷ்திபூர் போலீசில் மகனை கண்டுபிடித்து தர வேண்டும் என புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நிதிஷ்குமாரின் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவை சமூக வலைதளங்களில் பார்த்தனர். போலீசார் சங்கர் ராய் வீட்டிற்கு சென்று வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த நிதிஷ் குமாரை மீட்டனர்.
தன்னை கடத்திச் சென்று கட்டாய திருமணம் செய்து வைத்த சங்கர் ராய் குடும்பத்தினர் மீது போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கர் ராய் குடும்பத்தினரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பீகாரில் அரசு வேலை மற்றும் உயர் கல்வி முடித்த வாலிபர்களை குறி வைத்து கட்டாய திருமணங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 2009-ம் ஆண்டு முதல் இதுவரை 1,224 ஆண்களை கடத்தி சென்று கட்டாய திருமணம் செய்துள்ளனர்.
பெண்களின் பெற்றோர் வாலிபர்களை கடத்திச் சென்று ஆயுதங்களை காட்டி மிரட்டி அவர்களின் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து வைக்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே திருமணமாகாத 90’ஸ் கிட்ஸ் ஆண்களுக்கு இது போன்ற திருமணங்கள் மேலும் சோதனையாக மாறி உள்ளது.