தேசிய செய்திகள்

வகுப்பறையில் தூங்கிய ஆசிரியர்கள்

ஆசிரியர்கள் தூங்குவதையும், வகுப்பறை காலியாக கிடப்பதையும் சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

பாட்னா,

பீகார் மாநிலம் சுபௌல் மாவட்டம் திரிவேணிகஞ்ச் பகுதியில் உள்ள கோரியா அரசு தொடக்க பள்ளியில், ஆசிரியர்கள் வகுப்பறையிலேயே சொகுசாக தூங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெஞ்சில் சொகுசு தூக்கம்

வழக்கம்போல் பள்ளிக்கு வந்த தினேஷ் குமார் மண்டல், தேவேந்திர சர்தார் ஆகிய இரண்டு ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாடம் நடத்தாமல் வகுப்பறைக்குள்ளேயே நாற்காலியிலும், பெஞ்சிலும் கால்களை நீட்டி ‘கும்பகர்ண’ தூக்கம் போட்டுள்ளனர்.

வீடுகளுக்கு ஓடிய மாணவர்கள்

ஆசிரியர்கள் இருவரும் குறட்டை விட்டு தூங்குவதை கண்ட மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பாடம் நடத்த யாரும் இல்லாததால், செய்வதறியாது திகைத்த சிறுவர்கள், தங்களது புத்தக பைகளை சுருட்டிக்கொண்டு வகுப்பறையை விட்டு வெளியேறி தங்களது வீடுகளுக்கு ஓட்டம் பிடித்தனர். இதனால் ஒட்டுமொத்த வகுப்பறையும் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடியது.

வீடியோ வைரல்

ஆசிரியர்கள் தூங்குவதையும், வகுப்பறை காலியாக கிடப்பதையும் அங்கிருந்த சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த வீடியோ மின்னல் வேகத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தங்களது பிள்ளைகளின் எதிர்காலத்தை இப்படி பாழாக்குகிறார்களே என ஆத்திரமடைந்த பெற்றோர்களும், பொதுமக்களும் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டு கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தினர்.

சஸ்பெண்ட்

இந்த விவகாரம் கல்வித்துறை அதிகாரிகள் வரை எட்டியது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த வட்டாரக் கல்வி அலுவலர், தீவிர விசாரணை நடத்தினார். விசாரணையில் ஆசிரியர்களின் அலட்சியப்போக்கு அப்பட்டமாக தெரிந்ததை அடுத்து, கடமை தவறிய ஆசிரியர்கள் தினேஷ் குமார் மண்டல், தேவேந்திர சர்தார் ஆகிய இருவரையும் கல்வித்துறை நிர்வாகம் உடனடியாக பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது. மேலும் அவர்கள் மீது துறை ரீதியான கடுமையான ஒழுங்கு நடவடிக்கைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு பள்ளி வகுப்பறையையே படுக்கையறையாக மாற்றிய ஆசிரியர்களின் இந்தச் செயல் பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.