பாலக்காடு,
கேரள மாநிலம் ஒட்டப்பாலம் - சொரனூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே ரெயில்களை கவிழ்க்கும் நோக்கில், அடுத்தடுத்து 3 இடங்களில் தண்டவாளத்தின் குறுக்கே கான்கிரீட் மற்றும் இரும்பு துண்டுகள் வைக்கப்பட்டிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒட்டப்பாலம் மற்றும் சொரனூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே மண்ணன்னூர், காரக்காடு ஏ-காபின் உள்ளிட்ட 3 முக்கிய இடங்களில் தண்டவாளத்தின் குறுக்கே ரெயிலை கவிழ்க்கும் நோக்கில் கனமான பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. தண்டவாளத்தின் நடுவே கான்கிரீட் ஸ்லாப், கனமான இரும்பு ரெயில் துண்டுகள் மற்றும் சாக்கில் கான்கிரீட் போல கெட்டியான சிமெண்ட் மூட்டை ஆகியவை வைக்கப்பட்டிருந்து.
உடனடியாக இதுகுறித்து ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த பொருட்களை சரியான நேரத்தில் அப்புறப்படுத்தினர். இதனால் பயங்கர ரெயில் விபத்து தவிர்க்கப்பட்டது
இந்த நாசவேலை குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில், சந்தேகத்தின் அடிப்படையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுக்லால் மரியா என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.