தேசிய செய்திகள்

பீகாரின் நிதி நிலைமை மிகவும் மோசமாக உள்ளது: தேஜஸ்வி யாதவ்

அமெரிக்க டாலர்களில் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியை பார்த்தால், வங்காளதேசத்தை விடவும் பின்தங்கி, இந்தியா உலகில் 16வது இடத்தில் உள்ளது என தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.

பாட்னா,

தேஜஸ்வி யாதவ் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

2013 ஜூலை 25 அன்று பிரதமராக பதவியேற்பதற்கு முன்பு, மத்திய அரசுக்கும் ரூபாய்க்கும் இடையே யார் மேலும் வீழ்ச்சியடைவார்கள் என்பதில் ஒரு போட்டி நடந்து கொண்டிருப்பதாக மோடி கூறியிருந்தார். இன்று, ரூபாய் அதன் மிக குறைந்த நிலையை அடைந்து, ஆசியாவிலேயே மிகவும் பலவீனமான நாணயமாக மாறியுள்ளது.

மோடியின் தலைமையில் ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவது இது எட்டாவது ஆண்டாகும். கடந்த 12 ஆண்டுகளில், ரூபாய் தனது மதிப்பில் பாதியை இழந்துள்ளது. நாட்டு மக்களை தவறாக வழிநடத்தும் பிரதமர், இந்தியா உலகின் முன்னணி பொருளாதாரங்களில் ஒன்று என்று கூறுகிறார். ஆனால், அமெரிக்க டாலர்களில் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியை பார்த்தால், வங்காளதேசத்தை விடவும் பின்தங்கி, இந்தியா உலகில் 16வது இடத்தில் உள்ளது.

தொலைநோக்கு பார்வையற்ற என்டிஏ அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைகளால், நாட்டின் பொருளாதாரம் முற்றிலுமாகச் சீரழிந்துள்ளது. பணவீக்கம், வறுமை மற்றும் வேலையின்மை ஆகியவை அனைத்து சாதனைகளையும் முறியடித்துள்ளன. நாட்டின் மிகவும் பின்தங்கிய மற்றும் ஏழ்மையான மாநிலமான பீகாரின் நிதி நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.

எல்பிஜி எரிவாயு, பெட்ரோல்-டீசல், உரங்கள்-விதைகள், கல்வி-மருந்து-நீர்ப்பாசனம் என அனைத்து பொருட்களின் விலைகளும் உயர்ந்து வருகின்றன. ரேஷன் பொருட்கள், எண்ணெய், பருப்பு வகைகள், பால் மற்றும் அன்றாடத் தேவைகள் சாதாரண மக்களின் கைக்கு எட்டாதவாறு நழுவி செல்கின்றன. ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு இல்லறம் நடத்துவது கடினமாகிவிட்டது. உணவு முதல் போக்குவரத்து வரை அனைத்தும் விலை உயர்ந்துவிட்டன, ஆனால் இரட்டை எஞ்சின் என அழைக்கப்படும் என்டிஏ அரசாங்கத்திடம் பணவீக்கத்தை கட்டுப்படுத்த உறுதியான செயல் திட்டம் எதுவும் இல்லை.

நாட்டின் பிரதமரிடமும் இரட்டை எஞ்சின் அரசாங்கத்திடமும் இந்த பணவீக்க பெருநாடகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க எந்த தீர்வும் இல்லை. இந்த இரட்டை எஞ்சின் அரசாங்கத்தில், வேலையின்மை, வறுமை மற்றும் பணவீக்கம் ஆகியவை கவலையளிக்கும் விகிதத்தில் பல மடங்கு பெருகி வருகின்றன. பீகாரில் அரசாங்கம் செயல்படும் விதம், இங்கு அரசாங்கமே இல்லாதது போன்ற உணர்வைத் தருகிறது. என்டிஏ அரசாங்கத்திற்கு பாமர மக்கள் மீது சிறிதும் அக்கறை இல்லை.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.