பாட்னா
பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவராக, முதல்-மந்திரி நிதிஷ் குமார் செயல்பட்டு வந்த நிலையில், அவர் மாநிலங்களவை தேர்தலுக்கு போட்டியிட முடிவு செய்து, அதற்காக முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்கிறேன் என கூறினார்.
இதற்கு கட்சிக்குள் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அவர் பதவி விலக கூடாது என தொண்டர்கள் வலியுறுத்தினர். இந்த நிலையில், எம்.எல்.சி. பதவியை நிதிஷ் குமார் கடந்த மார்ச் 30-ந்தேதி ராஜினாமா செய்துள்ளார். அதற்கு சில நாட்களுக்கு முன்பு, ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவராக நிதிஷ் குமார் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில், பீகாரில் புது வருட நாளான இன்று அடுத்தடுத்து திருப்பம் ஏற்பட்டு உள்ளது. பீகார் முதல்-மந்திரி பதவியை நிதிஷ் குமார் ராஜினாமா செய்துள்ளார். இதனால், 21 ஆண்டுகளாக முதல்-மந்திரியாக பதவி வகித்த அவருடைய சகாப்தம் முடிவுக்கு வருகிறது.
பீகாரில் நீண்டகாலத்திற்கு முதல்-மந்திரியாக பதவி வகித்தவர் என்ற பெருமைக்குரியவர் நிதிஷ் குமார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம்தான் 10-வது முறையாக முதல்-மந்திரியாக அவர் பதவியேற்றார். நாட்டில் நீண்டகாலம் முதல்-மந்திரியாக பதவி வகித்தவர்களின் வரிசையில் 8-வது இடத்தில் அவர் இருக்கிறார்.
அவருடைய ராஜினாமாவை அடுத்து, அவரின் மகனுக்கு முதல்-மந்திரி பதவி வழங்க கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பீகாரின் புதிய முதல்-மந்திரியாக பா.ஜ.க.வின் சாம்ராட் சவுத்ரி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
புதிய அரசுக்கு என்னுடைய ஒத்துழைப்பு, வழிகாட்டுதல் எப்போதும் இருக்கும் என கூறிய நிதிஷ் குமார், பீகாரின் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு அளித்து வரும் பிரதமர் மோடிக்கு நன்றியும் தெரிவித்து கொண்டார்.