தேசிய செய்திகள்

ஆந்திர தலைநகராக அமராவதியை முன்மொழியும் மசோதா; மக்களவையில் இன்று அறிமுகம்

அமராவதி நகரத்தை தலைநகராக ஆக்க ஆந் திர மாநில சட்டசபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

புதுடெல்லி,

கடந்த 2014-ம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானா மாநிலம் பிரிந்தது. அப்போது 10 ஆண்டுகளுக்கு இரு மாநிலங்களுக்கும் ஒரே தலைநகராக ஐதராபாத் இருக்கும் எனவும், இந்த காலக்கட்டத்துக்குள் ஆந்திர மாநிலம் தங்களுக்கென ஒரு புதிய தலைநகரை உருவாக்கிக் கொள்ள வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது. இதன்படி ஐதராபாத் இரு மாநிலங்களுக்கும் தலைநகராக இருந்து வருகிறது.

இந்த நிலையில் அமராவதி நகரத்தை தலைநகராக ஆக்க ஆந்திர மாநில சட்டசபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை ஆந்திர அரசு மாநிலங்களவை தலைவர், மக்களவை சபாநாயகர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சருக்கு அனுப்பி வைத்தது.

இதனைத் தொடர்ந்து, அமராவதியை ஆந்திராவின் தலைநகராக முன்மொழியும் மசோதா தயாரானது. இந்த மசோதாவை மக்களவையில் இன்று (புதன்கிழமை) அறிமுகம் செய்ய இருப்பதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.