தேசிய செய்திகள்

முகத்தில் கேக் பூசியதால் தகராறு 3 பேரை சுட்டுக்கொன்றவர் போலீஸ் என்கவுன்டரில் பலி

உத்தர பிரதேசத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது முகத்தில் கேக் பூசியதால் ஏற்பட்ட தகராறில், 3 பேரை சுட்டுக் கொன்றவர் போலீஸ் என்கவுனடரில் பலியாகியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் புலந்த்​சாகர் குர்ஜா நகர் பகுதியில் கடந்த 25-ந்தேதி இரவு ஜீத்து சைனி என்​பவரின் பிறந்த நாள் கொண்​டாட்​டம் நடை​பெற்​றது. அப்​போது ஜீத்து சைனி முகத்​தில் அவரது நண்​பர்​கள் சிலர் கேக் பூசியதாக கூறப்​படு​கிறது.

இதனால் இரு தரப்​பினர் இடையே கடும் வாக்​கு​வாதம் ஏற்​பட்​டது. பின்​னர் ஒரு​வர் துப்பாக்​கி​யால் சுட்டதாக கூறப்​படு​கிறது. இதில் 3 வாலிபர்​கள் கொல்​லப்​பட்​டனர்.

இதையடுத்து ஜீத்து சைனி உள்​ளிட்​டோர் தப்​பி ஓடினார்கள். அவர்களை கைது செய்ய 6 தனிப்​படைகள் அமைக்​கப்​பட்​டிருந்​தன. ஜீத்து சைனி குறித்து தகவல் கொடுப்​போருக்கு ரூ.50 ஆயிரம் வெகுமதி வழங்​கப்​படும் என்​றும் போலீ​சார் அறிவித்​திருந்​தனர்.

நேற்று முன்​தினம் இரவு, புலந்த்​சாகர் அருகே தராவு பகு​தி​யில் போலீசார் வாக​ன சோதனையில் ஈடு​பட்​டிருந்​தனர். அப்​போது அந்த வழியே 2 பேர் ஸ்கூட்​டரில் வந்​தனர். அவர்​களை நிறுத்​து​மாறு போலீசார் கூறினார்கள். ஆனால் அவர்​கள் வாக​னத்தை திருப்பி தப்பியோட முயன்​றனர்.

அவர்​களை துரத்​தி சென்ற போலீ​சார் ஜஜ்ஜார் சாலை பகு​தி​யில் அவர்களை மடக்​கினர். அப்​போது ஸ்கூட்​டரில் வந்த நபர்​கள் போலீசாரை நோக்கி துப்​பாக்​கி​யால் சுட்​டனர். பதி​லுக்கு போலீ​சாரும் துப்​பாக்​கி​யால் சுட்டனர். இந்த துப்​பாக்​கி சண்டை சில நிமிடங்​களுக்கு நீடித்தது. போலீசார் நடத்திய என்கவுன்டரில் ஒரு​வர் துப்​பாக்கி குண்டு பாய்ந்து கீழே விழுந்​தார். மற்றொரு​வர் தப்​பி ஓடி​விட்​டார்.

படுகாயம் அடைந்த வாலிபரை போலீசார் மருத்​து​வ​மனைக்கு தூக்​கி சென்​றனர். ஆனால் அவர் ஏற்​கெனவே உயிரிழந்​து ​விட்​ட​தாக மருத்துவர்கள் தெரி​வித்​தனர். விசா​ரணை​யில் என்கவுன்டரில் கொல்லப்பட்டவர் ஜீத்து சைனி என்பது தெரியவந்​தது.

சம்பவ இடத்​தில் கிடந்த துப்பாக்கி, குண்​டு​கள், நம்​பர் பிளேட் இல்​லாத ஸ்கூட்​டர் ஆகிய​வற்றை போலீ​சார் பறி​முதல் செய்​தனர். இந்த வழக்​கில் ஏற்​கெனவே 6 பேரை போலீசார்​ கைது செய்​துள்​ளனர்​.