தேசிய செய்திகள்

பா.ஜ.க. எப்போதும் கூட்டணி கட்சிகளை ஏமாற்றும்; நிதிஷ்குமார் முடிவு பற்றி காங்கிரஸ் கருத்து

2025-ம் ஆண்டு பீகாரில் நடந்த சட்டசபை தேர்தலில் 3-ல் 2 பங்கு பெரும்பான்மையுடன் என்.டி.ஏ. ஆட்சியை பிடித்து நிதிஷ்குமார் மீண்டும் முதல்-மந்திரி ஆனார்.

புனே

பீகாரில் ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவரான நிதிஷ்குமார் முதல்-மந்திரியாக பதவி வகித்து வரும் நிலையில் மாநிலங்களவை உறுப்பினராக முடிவு செய்துள்ளார். இதனையடுத்து, முதல்-மந்திரி பதவியில் இருந்து அவர் விலக உள்ளார் என தகவல் வெளியானது.

இந்நிலையில் பீகாரில், சட்டசபை செயலாளர் கியாதி சிங் அலுவலகத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா முன்னிலையில், நிதிஷ்குமார் தன்னுடைய வேட்புமனுவை இன்று தாக்கல் செய்துள்ளார். இந்த வேட்புமனு தாக்கலின்போது, துணை முதல்-மந்திரிகள் சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் குமார் சின்ஹா ஆகியோரும் உடன் இருந்தனர்.

10 முறை முதல்-மந்திரியாக பதவி வகித்தவர் என்ற பெருமையை பெற்ற நிதிஷ்குமார், பா.ஜ.க.விற்கு முதல்-மந்திரி பதவியை வழங்குவதற்காக தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய உள்ளார் என்றும் நிதிஷ்குமாரின் மகன் நிஷாந்த் குமார் துணை முதல்-மந்திரியாவார் என்றும் கூறப்படுகிறது.

அவருடைய இந்த முடிவு பற்றி மராட்டிய மாநில காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ. நானா படோலே நிருபர்களிடம் கூறும்போது, பா.ஜ.க. எப்போதும் கூட்டணி கட்சிகளை ஏமாற்றும் தன்மை கொண்டது. நிதிஷ்குமார் நிலைமையை மராட்டிய துணை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவுடன் ஒப்பிட்டு பேசினார்.

அவர் கூறும்போது, இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு மராட்டியம். ஏக்நாத் ஷிண்டேவின் தலைமையில் தேர்தலை சந்தித்தனர். மீண்டும் ஆட்சிக்கு வந்தனர். ஆனால், ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரி ஆகவில்லை.

பீகாரிலும் நிதிஷ்குமார் தலைமையில் தேர்தலில் (பா.ஜ.க.வை குறிப்பிட்டு) போட்டியிட்டு அவர்கள் வெற்றி பெற்றனர். தற்போது முதல்-மந்திரி பதவியில் இருந்து நிதிஷ்குமார் நீக்கப்பட்டு விட்டார் என கூறியுள்ளார்.

மராட்டிய சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. 132 இடங்களையும், சிவசேனா 37 இடங்களையும், தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களையும் பிற கட்சிகள் 5 இடங்களையும் பிடித்தன. தேர்தல் முடிவுக்கு பின்னர் ஷிண்டேவை நீக்கி விட்டு, தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2025-ம் ஆண்டு பீகாரில் நடந்த சட்டசபை தேர்தலில் 3-ல் 2 பங்கு பெரும்பான்மையுடன் என்.டி.ஏ. ஆட்சியை பிடித்து நிதிஷ்குமார் மீண்டும் முதல்-மந்திரி ஆனார். ஆனால் அவர் தற்போது மாநிலங்களவை தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்து உள்ளார்.