புதுடெல்லி,
தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்காளம் உள்பட 5 மாநில தேர்தலுடன், வேறு 5 மாநிலங்களில் காலியாகி இருந்த 7 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடத்தப்பட்டது. இந்த தொகுதிகளில் பதிவான வாக்குகளும் நேற்று எண்ணப்பட்டன.
இதில் முக்கியமாக பா.ஜ.க. ஆளும் குஜராத்தின் உம்ரேத் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் ஹர்ஷாத் பார்மர், காங்கிரஸ் சார்பில் புருகுராஜ் சின் சவுகான் ஆகியோர் போட்டியிட்டு இருந்தனர். அங்கு பா.ஜ.க. வேட்பாளர் பார்மர் 85,000 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சவுகான் 54,757 வாக்குகள் மட்டுமே பெற்றார்.
கர்நாடகத்தில் பாகல்கோட்டை, தாவணகெரே தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. பாகல்கோட்டை தொகுதியில் மறைந்த எம்.எல்.ஏ. எச்.ஒய்.மேட்டியின் மகன் உமேஷ் மேட்டி காங்கிரஸ் சார்பில் களமிறக்கப்பட்டார். பா.ஜ.க. சார்பில் வீரண்ணா சரண்டிமட் மற்றும் சுயேச்சைகள் என 9 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.
இதில் உமேஷ் மேட்டி 98,919 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். பா.ஜ.க. வேட்பாளர் வீரண்ணா சரண்டிமட் 76,587 வாக்குகளை பெற்று தோல்வி அடைந்தார்.
தாவணகெரே தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்து மரணமடைந்த சாமனூர் சிவசரங்கரப்பாவின் பேரனும், மந்திரி எஸ்.எஸ்.மல்லிகார்ஜூனின் மகனுமான சமர்த் சாமனூர், பா.ஜ.க. சார்பில் சீனிவாஸ் தாசகரியப்பா, எஸ்.டி.பி.ஐ. சார்பில் அப்சர் கொட்லிபேட், சுயேச்சைகள் உள்பட 25 பேர் போட்டியிட்டனர். இதில் சமர்த் சாமனூர் பா.ஜ.க. வேட்பாளர் சீனிவாஸ் தாசகரியப் பாவை 5,708 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். எஸ்.டி.பி.ஐ. வேட்பாளர் அப்சர் கொட்லிபேட்டுக்கு 18,975 வாக்குகள் கிடைத்தது.
மராட்டியத்தின் பாராமதி தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த தேசியவாத காங்கிரஸ் தலைவரும், முன்னாள் துணை முதல்-மந்திரியுமான அஜித்பவார் விமான விபத்தில் மரணம் அடைந்தார். எனவே அந்த தொகுதியில் கடந்த மாதம் நடந்த இடைத்தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் சார்பில் அஜித்பவார் மனைவியும், தற்போதைய துணை முதல்-மந்திரியுமான சுனேத்ரா பவார் போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான கட்சிகள் யாரும் போட்டியிடவில்லை.
இதனால் சுனேத்ரா பவார் 2,18,930 வாக்குகளை பெற்று பிரமாண்ட வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.
மேலும் ரகுரி தொகுதியில் மறைந்த சிவாஜி கர்திலே எம்.எல்.ஏ.வின் மகன் அக்சய் கர்திலே போட்டியிட்டார். அவர் 1,40,093 வாக்குகள் பெற்று பிரமாண்ட வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.) வேட்பாளர் கோவிந்த் மோகதேவுக்கு 27,506 வாக்குகள் மட்டுமே கிடைத்தது.
திரிபுரா மாநிலத்தின் தர்மநகர் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் ஜகர் சக்ரவர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அமிதபாதத்தா, காங்கிரசின் சயன் பட்டாச்சார்யா உள்ளிட்டோர் களமிறங்கி இருந்தனர். இங்கு நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் பா.ஜ.க.வின் சக்ரவர்த்தி 18,920 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அமிதபாதத்தா 6,001 வாக்குகளும், சயன் பட்டாச்சார்யா 5,936 வாக்குகளும் பெற்றிருந்தனர்.
நாகாலாந்தில் கொரிடாங் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட டவோசியர் இம்சென் 3,123 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் 7,317 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் தோசிகமா 4,194 வாக்குகளும் பெற்றனர்.
இதற்கிடையே பீகார் சட்ட மேலவையில் காலியான ஒரு இடத்துக்கும் இடைத்தேர்தல் நடந்தது. இதில் பா.ஜ.க. மூத்த தலைவர் அரவிந்த் சர்மா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.