தேசிய செய்திகள்

‘அனைத்து கருத்து கணிப்புகளின் பின்னாலும் பா.ஜ.க.வே உள்ளது’ - மம்தா பானர்ஜி

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 226 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா,

294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. கடந்த ஏப்ரல் 23-ந்தேதி முதல் கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில், 29-ந்தேதி 2-ம் கட்ட தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெற உள்ளது.

நேற்று வாக்குப்பதிவு நிறைவடைந்ததை தொடர்ந்து, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகின. கருத்து கணிப்பு முடிவுகளைப் பொறுத்தவரை மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு கடும் போட்டியாக பா.ஜ.க. உருவெடுத்திருப்பது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், அனைத்து கருத்து கணிப்புகளின் பின்னாலும் பா.ஜ.க.வே உள்ளது என மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது;-

“2021, 2024 தேர்தல்களிலும் இதேதான் நடந்தது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் பா.ஜ.க.வின் வெற்றியை சுட்டிக்காட்டுகின்றன. அனைத்து கருத்து கணிப்புகளின் பின்னாலும் பா.ஜ.க.வே உள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களின் நம்பிக்கையை உடைக்க பா.ஜ.க. விரும்புகிறது.

கருத்து கணிப்புகளை நாங்கள் நிராகரிக்கிறோம். 226 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று மேற்கு வங்காளத்தில் ஆட்சியை தக்கவைப்போம். வாக்கு எண்ணிக்கை நாளன்று திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் மிகுந்த விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.