தேசிய செய்திகள்

பா.ஜ.க. தலைவர் நிதின் நபின் உள்ளிட்ட 16 பேர் மாநிலங்களவை எம்.பி.க்களாக பதவியேற்பு

இன்று பதவியேற்ற 16 நாடாளுமன்ற உறுப்பினர்களில், 8 பேர் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள் மற்றும் 3 பேர் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

புதுடெல்லி,

3 நாட்கள் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்று தொடங்கி உள்ளது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசித்த பிறகு, நாடாளுமன்ற அலுவல்கள் தொடங்கப்பட்டன.

தொடர்ந்து, பா.ஜ.க. தேசிய தலைவர் நிதின் நபின், மத்திய மந்திரி ராம் நாத் தாக்கூர் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர் அபிஷேக் சங்வி உள்பட, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 13 பேர் மாநிலங்களவை எம்.பி.க்களாக இன்று பதவியேற்றனர்.

பீகார், அசாம், அரியானா, இமாசலப் பிரதேசம், மராட்டிய மாநிலம், ஒடிசா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 16 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு இந்திய துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை சபாநாயகருமான சி.பி. ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இன்று பதவியேற்ற 16 நாடாளுமன்ற உறுப்பினர்களில், 8 பேர் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள் மற்றும் 3 பேர் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள். மேலும், மற்ற 5 பேர் பேர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆவர். பா.ஜ.க.வின் தேசியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, பீகார் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த நிதின் நபின், தற்போது மாநிலங்களவை எம்.பி. ஆக பதவியேற்றுள்ளார்.

அவருடன் மத்திய மந்திரி ராம் நாத் தாக்கூரும் பதவியேற்றார். அவர் பீகாரில் இருந்து மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். உபேந்திர குஷ்வாஹா (ஆர்.எல்.எம்.) மற்றும் சிவேஷ் குமார் (பா.ஜ.க.) ஆகியோரும் பீகாரில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அதே போல் அசாம் மாநிலத்தில் இருந்து தெராஷ் கோவல்லா (பா.ஜ.க.), ஜோகன் மோகன் (பா.ஜ.க.) மற்றும் பிரமோத் போரோ (UPP-L) ஆகியோர் மாநிலங்களைவை எம்.பி.க்களாக பதவியேற்றுள்ளனர்.

மேலும் சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து லட்சுமி வர்மா (பா.ஜ.க.) மற்றும் பூலோ தேவி நேதம் (காங்கிரஸ்), அரியானா மாநிலத்தில் இருந்து கரம்வீர் சிங் பவுத் (காங்கிரஸ்) மற்றும் சஞ்சய் பாட்டியா (பா.ஜ.க.) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு இன்று மாநிலங்களவை எம்.பி.க்களாக பதவியேற்றுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அபிஷேக் மனு சங்வி மற்றும் வேம் நரேந்திர ரெட்டி ஆகிய இருவரும் தெலங்கானாவில் இருந்தும், பா.ஜ.க.வை சேர்ந்த சுஜீத் குமார் ஒடிசாவில் இருந்தும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அனுராக் சர்மா இமாச்சல பிரதேசத்தில் இருந்தும் இன்று எம்.பி.க்களாக பதவியேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.