தேசிய செய்திகள்

காங். மேடையில் பிரதமர் மோடியை கிண்டல் செய்து காமெடி நிகழ்ச்சி: பாஜக கடும் கண்டனம்

இதுபோன்ற அணுகுமுறையே இளைஞர்களிடையே ராகுல் காந்திக்கான ஆதரவு குறைவதற்குக் காரணம் என்று பாஜக விமர்சித்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற ‘மாணவர்களின் குரல்’ நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடியைப் போன்று பேசி மேடை நகைச்சுவைக் கலைஞர் புல்கித் மணி கிண்டல் செய்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் காந்தியுடன் மேடையைப் பகிர்ந்துகொண்ட நகைச்சுவைக் கலைஞர் புல்கித் மணி, பிரதமர் மோடியின் பேச்சு நடை மற்றும் வெளிநாட்டுத் தலைவர்களுடனான உரையாடல்களைப் கிண்டல் செய்து பேசினார். குறிப்பாக, பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் மூத்த பெண் ஒருவருக்கு இருக்கை வழங்கி உபசரித்த சம்பவங்களை கிண்டல் செய்யும் வகையில் ‘மை ஃபிரண்ட்’, ‘கிரேட் ஹராஸ்மென்ட்’ உள்ளிட்ட சொற்களைப் பயன்படுத்தி அவர் பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு ராகுல் காந்தி சிரித்ததாகவும் விமர்சனம் எழுந்துள்ளது. இந்த நிலையில், இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள பாஜக, ராகுல் காந்திக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.

இதுதொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, காங்கிரஸ் கட்சி காமெடியன்கள் மற்றும் கோமாளிகளின் கட்சியாக மாறிவிட்டதாக விமர்சித்துள்ளார். மேலும், அந்தக் கட்சியின் அரசியல் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் சி.ஆர். கேசவனும் இந்தச் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மலிவான மற்றும் நாகரிகமற்ற முறையில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியை எந்தவொரு கண்ணியமான நபரும் ரசிக்க மாட்டார் என்று அவர் கூறியுள்ளார். இதுபோன்ற அணுகுமுறையே இளைஞர்களிடையே ராகுல் காந்திக்கான ஆதரவு குறைவதற்குக் காரணம் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

மேலும், டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் காங்கிரஸ் மாணவர் அமைப்பான என்.எஸ்.யு.ஐ. தோல்வியடைந்ததை சுட்டிக்காட்டிய சி.ஆர். கேசவன், ராகுல் காந்தியின் வெறுப்பு அரசியலை இளைஞர்கள் முற்றிலுமாக நிராகரித்துவிட்டதாக தெரிவித்துள்ளார். மத்திய கல்வி அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி, டெல்லி முதல்வர் ரேகா குப்தா, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோரும் இந்தச் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT