தேசிய செய்திகள்

அசாமில் ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்த பா.ஜ.க.

முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா, காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்து, அமோக வெற்றி பெற்றார்.

கவுகாத்தி,

வடகிழக்கு மாநிலமான அசாமில், 10 ஆண்டுகளாக ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. அங்குள்ள 126 தொகுதிகளிலும் கடந்த மாதம் 9-ந் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்தது. 2 கோடியே 50 லட்சம் வாக்காளர்களில், 85.96 சதவீதம்பேர் வாக்களித்தனர். 722 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். பா.ஜ.க. காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவியது.

இந்நிலையில், நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. 35 மாவட்டங்களில் அமைந்துள்ள 40 வாக்கு எண்ணும் மையங்களில் காலை 8 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஆரம்பத்தில் இருந்தே பா.ஜ.க. முன்னிலையில் இருந்தது. ஜாலுக்பாரி தொகுதியில் போட்டியிட்ட முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா 89 ஆயிரத்து 434 வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் பிடிஷா நியோக்கை தோற்கடித்து, அமோக வெற்றி பெற்றார்.

காங்கிரசின் முதல்-மந்திரி வேட்பாளராக அறியப்பட்ட கவுரவ் கோகாய் ஜோர்ஹட் தொகுதியில் 23 ஆயிரத்து 182 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவபிரதா சைக்கியாவும் தோல்வியை தழுவினார்.

சபாநாயகர் பிஸ்வஜித் தைமரி, தமுல்பூர் தொகுதியில் வெற்றி பெற்றார். பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான அசாம் கண பரிஷத்தின் தலைவர் அதுல் போரா வெற்றி பெற்றார். பியுஷ் ஹசாரிகா, ரனோஜ் பேகு, அஜந்தா நியோக், அதுல் போரா உள்ளிட்ட மாநில மந்திரிகள் பலர் வெற்றி பெற்றனர். ரைஜோர் தளத்தின் தலைவர் அகில் கோகாய், சிப்சாகர் தொகுதியில் வெற்றி பெற்றார்.

பா.ஜ.க. கூட்டணி தொடர்ந்து வெற்றி முகமாக காணப்பட்டது. வாக்கு எண்ணிக்கையின் இறுதியில், பா.ஜ.க. கூட்டணி 101 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 3-வது தடவையாக ஆட்சியை கைப்பற்றி 'ஹாட்ரிக்' சாதனை படைத்தது. மொத்தம் உள்ள 126 தொகுதிகளில், குறைந்தபட்ச பெரும்பான்மைக்கு 64 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஆனால், மூன்றில் இருபங்குக்கு மேலான பெரும்பான்மையை பா.ஜ.க. கூட்டணி பெற்றுள்ளது.